லக்னோ,
உத்தர பிரதேசம் மாநிலம் பிஜ்னோர் அருகே அமான்நகர் கிராமத்தை சேர்ந்தவர் ஞான்சிங். ஊர்க்காவல் படைவீரர். திருமணமாகி 20, 18 மற்றும் 14 வயதில் 3 மகள்கள் உள்ளனர்.
இந்தநிலையில் ஞான்சிங் வீட்டின் பின்புறத்தில் உள்ள தோப்புக்குள் நடத்து சென்று கொண்டிருந்தனர். அப்போது அங்குள்ள மாமரத்தில் நின்று கொண்டிருந்த சிறுத்தை ஒன்று, ஞான்சிங் மீது பாய்ந்து கடித்து குதறியது. இதனால் பயத்தில் துடித்த ஞான்சிங்கின் அலறல் சத்தம் கேட்டு அவருடைய மகள்கள் அங்கு விரைந்தனர்.
சிறுத்தையிடம் சிக்கி தவித்த தந்தையை எவ்வித அச்சமின்றி காப்பாற்ற துணிந்தனர். அந்த சிறுத்தையை தந்தையிடம் இருந்து விலக்கி அதனை வெறுங்கைகளால் 3 பேரும் சேர்ந்து அடித்து கொன்றனர். சுமார் 10 நிமிடங்கள் நீடித்த இந்த போராட்டத்தில் தந்தையின் உயிரை காப்பாற்றி 'தந்தை பாசம்' பெரிது என நிரூபித்து காட்டினர். தகவலறிந்த வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து இறந்த சிறுத்தையின் உடலை மீட்டு சென்றனர்.
இந்த சம்பவம் தொடர்பாக கிராமவாசிகள் கூறுகையில், மூன்று குழந்தைகளும் தங்கள் தந்தையைக் காப்பாற்ற முயன்றனர், அங்கு திஷா தைரியமாக சிறுத்தையின் கால்களை பின்னால் இருந்து பிடித்தார், அதே நேரத்தில் ரேஷு மற்றும் தீப் ஷு சிறுத்தையுடன் 10 நிமிடங்கள் போராடினர் என்று கூறினர்.
இறந்த சிறுத்தை பெண் என்றும், அதற்கு மூன்று வயது இருக்கும் என்றும் ரேஞ்சர் ரஜ்னீஷ் தோமர் தெரிவித்தார். இந்த வழக்கில் துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.