
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் இன்று மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
அ.தி.மு.க.வை எந்தக் கொம்பனாலும் கபளீகரம் செய்ய முடியாது என்ற கருத்தைச் சொல்லும் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, யார் கபளீகரம் செய்ய முயற்சிக்கின்றனர் என்பதை தெளிவுபடுத்த வேண்டும். பா.ஜ.க. - அ.தி.மு.க. இடையே இணைப்பு உள்ளதே தவிர, பிணைப்பு இருப்பதாக தெரியவில்லை.
திருமாவளவனுக்கு ராமதாஸ் மீது திடீரென என்ன பாசம் என அன்புமணி கேட்கிறார். பாசம் என்பது ஒரு வலிமையான வார்த்தை. நாங்கள் குறிப்பிட்டது அந்த அடிப்படையால் அல்ல; தந்தை மகனுக்கு இடையே இடைவெளி பெரிதாகி விடக்கூடாது என்ற அடிப்படையில் சொல்லப்பட்ட ஒரு பொறுப்பான வார்த்தை அவ்வளவுதான். தந்தைக்கு இருக்கும் அனுபவம், ஆளுமையை அன்புமணி பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
பா.ம.க. இங்கே எளிய மக்களுக்காக போராடுகிற கட்சி என்று நம்புவதால் அவர்களுக்கு இடையே இடைவெளி ஏற்பட்டு விடக்கூடாது. அந்த இடைவெளியை பயன்படுத்தி பாசிச சக்திகள் உள்ளே நுழைந்து விடக்கூடாது. சனாதன சக்திகள் அதை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்ள முயற்சிக்கிறார்கள், எச்சரிக்கையாக இருங்கள். இவ்வாறு அவர் கூறினார்.