‘‘குக்கர் கட்சி நிலைமை எப்படி இருக்கு..’’ என கேட்டபடி வந்தார் பீட்டர் மாமா.‘‘சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் மற்ற கட்சிகள் தேர்தல் வேலையை தொடங்கிவிட்ட நிலையில் அமமுக கட்சி செயல்படாமல் இருப்பதால் மன்னர் மாவட்டத்தில் அமமுக நிர்வாகிகள் அதிமுக, பாஜவை நோக்கி புறப்பட தயராகிவிட்டதாக அமமுக வட்டாரத்தில் பேச்சு எழுந்துள்ளது. அமமுக டிடிவி தினகரனால் தொடங்கப்பட்டு புதிய நிர்வாகிகள் நியமனம் செய்யப்பட்டனர். சட்டமன்றம், நாடாளுமன்றம் உள்ளிட்ட தேர்தலில் போட்டியிட்டனர். சொத்தை விற்று செலவு செய்தனர்.
ஆனால் எந்த முன்னேற்றம் இல்லாமல் நிர்வாகிகள் அதிருப்தியில் உள்ளனர். இந்நிலையில் அதிமுக இபிஎஸ் பக்கம் சென்று, பாஜவுடன் கூட்டணியும் வைத்துவிட்டனர். தற்போது சட்டமன்ற தேர்தல் வரவுள்ளது. இந்த நேரத்தில் கூட கட்சி செயல்படாமல் உள்ளது. இதனால் மன்னர் மாவட்டத்தில் அமமுக நிர்வாகிகள் அதிமுக, பாஜவில் சேர முயற்சிக்கின்றனர். இதை பயன்படுத்தி, அதிமுகவினர், மன்னர் மாவட்ட அமமுக நிர்வாகிகளை ஒட்டு மொத்தமாக இழுக்கும் மறைமுக பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்களாம்..’’ என்றார் விக்கியானந்தா.
‘‘சம்திங் வாங்கி கட்சி பதவி கொடுத்துவந்தவர்களுக்கு திடீர் சிக்கல் வந்துவிட்டதுபோல..’’ என கேட்டு சிரித்தார் பீட்டர் மாமா. ‘‘தூங்கா நகரத்து இலைக்கட்சியில் ஒவ்வொரு பதவிக்கும் பைசா நிர்ணயிக்கப்பட்டு பெரும் வசூல் நடத்தி, யார் அதிக தொகைக்கு கேட்டார்களோ அவர்களுக்கே டெண்டர் முறையில் பதவி வழங்கியதாக புகார்கள் கட்சி வட்டாரம் முழுக்க ஓங்கி ஒலிக்கிறது. சமீபத்திய புதிய பட்டியல் வந்தது முதலே கட்சிக்குள் சர்ச்சைகள் அதிகரித்துள்ளன. பதவி கிடைக்காத பலரும் தலைமைக்கு கடுமையாக அதிருப்தி தெரிவித்து வருகின்றனராம். இதற்கிடையில் இளைஞரணியில் மாநிலப் பொறுப்பில் இருந்து வந்த விநாயகர், தன் பதவியை ராஜினாமா செய்ததன் பின்னணியில் பெரிய விஷயம் ஒளிந்து கிடக்கிறதாம்.
இலைக்கட்சியில் தூங்கா நகரின் கிழக்கு ஒன்றியத்தில் இரண்டை மூன்றாகப் பிரித்து ஒன்றை இந்த விநாயகருக்கு தருவதாக உறுதிதந்து, 20 லகரங்கள் வரையிலும் பெற்றுக் கொண்டும் பதவி தரவில்லையாம். வெறுத்துப் போன விநாயகர், ஒட்டுமொத்த ஆத்திரத்தில் தான் வகித்து வரும் மாநிலப் பொறுப்பையே உதறிவிட்டு, கொடுத்த பணத்தை திரும்பக்கேட்டு தன் பகுதி மாவட்ட தலைமையிடம் மல்லுக்கு நிற்கிறாராம்..’’ என்றார் விக்கியானந்தா. ‘‘தந்தை, மகன் மோதலால் இலைக்கட்சி மாஜி அமைச்சருக்கு தொகுதியை தாரை வார்க்கிறாராமே எம்எல்ஏ..’’ என்று கேட்டார் பீட்டர் மாமா. ‘‘தந்தை, மகன் மோதல் கட்சியில் தொகுதியை இலை கட்சி மாஜி அமைச்சரிடம் தாரை வார்க்கும் எம்எல்ஏ குறித்து பரபரப்பு தகவல் வெளியாகி இருக்கிறதாம்.
தந்தை, மகன் மோதல் கட்சியில் புரம் என்று முடியும் நிறுவனரின் சொந்த மாவட்டத்தில் முருகன் குடியிருக்கும் தொகுதியை கொண்ட எம்எல்ஏ, நிறுவனரின் மாவட்ட செயலாளர் உள்ளிட்ட கூட்டத்தை புறக்கணித்து வருகிறாராம். மகனின் ஆதரவாளராக இருக்கும் எம்எல்ஏவோ சொந்த மாவட்டத்தில் இருந்தால் காரணம் கேட்பார்கள் என்று வெளியில் சுற்றி வரும் அவர், தொகுதிக்குள் நுழைய முடியாத நிலை ஏற்பட்டு இருக்கிறதாம். வரும் சட்டமன்ற தேர்தலில் இந்த தொகுதியை இலைக்கட்சி மாஜி அமைச்சர் குறி வைத்திருக்கிறாராம். இந்த மாவட்டத்தில் பவர்புல் அமைச்சராக இருந்த அவர், மாவட்ட தலைநகர் தொகுதியில் திமுகவிடம் படுதோல்வி அடைந்து தனது சொந்த ஊர் அமைந்துள்ள முருகன் குடி கொண்ட தொகுதிக்கு செல்கிறாராம்.
இதனால் தற்போது அங்கு உள்ள தந்தை, மகன் மோதல் கட்சி எம்எல்ஏவிடம் பேசி அடுத்த தேர்தலில் நிற்பதற்கான வேலையை முடித்து விட்டார்களாம். கடந்த சட்டமன்ற தேர்தலில் இலைக்கட்சி கூட்டணியில், நான் உன்னை வெற்றி பெற வைத்ததால் இந்த முறை எனக்கு தொகுதியை விட்டுக் கொடுக்க வேண்டும் என்றும், இதற்கான ஆதாயத்தை கொடுப்பேன் என்றும் பேரம்பேசி அவரை சம்மதிக்க வைத்துள்ளாராம் மாஜி அமைச்சர். இதனால் தந்தை, மகன் மோதல் கட்சியின் எம்எல்ஏவும் சரி என்று கூற, தொகுதி முழுவதும் மாஜி அமைச்சர் கடந்த ஒரு மாதமாக தேர்தல் பணியை துவக்கி கிரிக்கெட் திருவிழாவும் நடத்தி இளைஞர் ஓட்டுக்களுக்கு லட்சத்தை வாரி இறைத்து வருகிறாராம்.
தற்போது உள்ள எம்எல்ஏவும் தந்தை, மகன் மோதல் என்று முடியுமோ, நமக்கு சீட்டு மீண்டும் கிடைக்குமோ, கிடைத்தாலும் வெற்றி பெறுவோமோ என்பதில் சந்தேகம் தான். அதனால் மாஜி அமைச்சரின் முடிவுக்கு கட்டுப்பட்டு செல்வதாகவும் அவர் தரப்பில் தெரிவித்திருக்கிறார்களாம். எல்லாம் தோட்டத்து நிறுவனர் கையில்தான் இருக்கிறது இந்த தொகுதியின் முடிவும், இலைக்கட்சியின் மாஜி அமைச்சரின் சீட்டு முடிவும் என்கின்றனர் இருதரப்பு கட்சியினரும். ஆனால் தோட்டத்து கட்சி நிறுவனர் மகனின் ஆதரவு எம்எல்ஏ தொகுதியை கண்டிப்பாக யாருக்கும் விட்டுக் கொடுக்க மாட்டோம். நாங்கள் எந்த கூட்டணி அமைத்தாலும் இந்த தொகுதியில் போட்டியிடுவோம், இது எங்கள் கவுரவ பிரச்னை என்று விடாப்பிடியாக இருப்பதாகவும் தோட்டத்து வட்டாரத்தில் கூறி வருகிறார்களாம்..’’ என்றார் விக்கியானந்தா.
The post தந்தை, மகன் மோதலால் மாஜி அமைச்சருக்கு அதிர்ஷ்டம் அடித்திருப்பதை பற்றி சொல்கிறார்; wiki யானந்தா appeared first on Dinakaran.