![](https://media.dailythanthi.com/h-upload/2025/01/24/35528847-chennai-14.webp)
திருவனந்தபுரம்,
கேரளா மாநிலம் வயநாடு மாவட்ட காங்கிரஸ் கட்சி பொருளாளராக இருந்தவர் விஜயன் (வயது 66). இவரது மகன் ஜிஜேஷ் (30). இவர்கள் 2 பேரும் கடந்த மாதம் 27-ந் தேதி மணிச்சேரியில் உள்ள வீட்டில் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டனர். இதற்கிடையே சுல்தான் பத்தேரி கூட்டுறவு வங்கியில் ஊழியர்களை நியமிக்க பலரிடம் இருந்து விஜயன் ரூ.1½ கோடி பெற்றதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதுகுறித்து சுல்தான் பத்தேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
அப்போது விஜயன் தற்கொலை செய்வதற்கு முன்பு எழுதிய கடிதத்தை கைப்பற்றினர். அதில், வங்கி ஊழியர் நியமனத்திற்கு பலரிடம் இருந்து பணம் பெற்று, அதனை காங்கிரஸ் எம்.எல்.ஏ.வான பாலகிருஷ்ணனிடம் கொடுத்தேன். ஆனால், அவர் பணத்தை பெற்றுக் கொண்ட பின்னர் அவர்களை நியமிக்க முன்வர வில்லை என்று குறிப்பிடப்பட்டு இருந்தது. அதன் அடிப்படையில் தற்கொலைக்கு தூண்டியதாக பாலகிருஷ்ணன் எம்.எல்.ஏ. மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
மேலும் உடந்தையாக இருந்த வயநாடு மாவட்ட காங்கிரஸ் தலைவர் அப்பச்சன், முன்னாள் பொருளாளர் கோபிநாத் ஆகிய 2 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதனால் அவர்கள் 3 பேரும் முன் ஜாமீன் கேட்டு கல்பெட்டா செசன்ஸ் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தனர். இந்த மனுவை விசாரித்த கோர்ட்டு, 3 பேருக்கு நிபந்தனை முன் ஜாமீன் வழங்கியது. இதையடுத்து கடந்த 2 நாட்களுக்கு முன்பு பாலகிருஷ்ணன் எம்.எல்.ஏ., அப்பச்சன், கோபிநாத் ஆகிய 3 பேரையும் போலீசார் விசாரணைக்கு அழைத்தனர்.
அதன்படி, அப்பச்சன், கோபிநாத் ஆகிய 2 பேரிடம் முதலில் விசாரணை நடத்தப்பட்டது. விசாரணைக்கு பின்னர் அவர்கள் 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். பின்னர் அவர்கள் ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர். அவர்களிடம் இருந்து ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது. இதையடுத்து பாலகிருஷ்ணன் எம்.எல்.ஏ.விடம் விசாரணை நடத்தப்பட உள்ளது. மேலும் இதுகுறித்து விசாரித்து அறிக்கை அளிக்குமாறு மாவட்ட கூட்டுறவுத்துறை பதிவாளருக்கு மாநில கூட்டுறவுத் துறை உத்தரவிட்டு உள்ளது.