தண்டவாள பராமரிப்பு பணிகள் காரணமாக பயணிகளின்றி வெறிச்சோடிய பொன்னேரி ரயில் நிலையம்: குறைந்த அளவு ரயில்களே இயக்கம்

2 months ago 11


பெரியபாளையம்: பொன்னேரி-கவரப்பேட்டை ரயில் நிலையங்களுக்கு இடையே 2வது நாளாக நேற்று தண்டவாள பராமரிப்பு பணிகள் மும்முரமாக நடைபெற்றது. இதனால், பயணிகள் கூட்டம் இன்றி பொன்னேரி ரயில் நிலையம் வெறிச்சோடி காணப்பட்டது. சென்னை கூடூர் ரயில்வே வழித்தடத்தில் அமைந்துள்ள, சென்னை-கும்மிடிப்பூண்டி ரயில் மார்க்கத்தில் பராமரிப்பு பணிகள் காரணமாக நேற்று 23 ரயில்கள் ரத்து செய்யப்பட்டன. பொன்னேரி-கவரப்பேட்டை ரயில் நிலையங்களுக்கு இடையே நேற்று காலை 9 மணி முதல் மாலை 3 மணி வரை பராமரிப்பு பணிகள் நடைபெறும் என தெற்கு ரயில்வே அறிவித்திருந்தது. கவரப்பேட்டை ரயில் நிலையம் அருகே சென்னையில் இருந்து கூடூர் செல்லும் வழித்தடத்தில் சுமார் 100 மீட்டர் தூரத்திற்கு தண்டவாளங்களை வெட்டி அகற்றி எடுத்து உறுதிப்படுத்தும் பணிகள் தற்போது தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

தொடர்ந்து, கவரப்பேட்டை ரயில் நிலையத்திற்கு அருகே, சுமார் 2 கிமீ தூரத்திற்கு இரு வழிப்பாதைகளிலும் தண்டவாளத்தை அகற்றி, அவற்றை உறுதிப்படுத்தும் பணிகள் நடைபெற உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே கடந்த 13ம் தேதி சுமார் 100 மீட்டர் தூரத்திற்கு பணிகள் நடைபெற்ற நிலையில், 2வது நாளாக நேற்று மீண்டும் தண்டவாள பராமரிப்பு பணிகள் நடைபெற்றது. வரும், 19, 21 ஆகிய தேதிகளிலும் இதே போல் ரயில் சேவை ரத்து செய்யப்பட்டு தண்டவாள பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இதனிடையே ஆந்திரா வழியே வடமாநிலங்களுக்குச் செல்லக்கூடிய எக்ஸ்பிரஸ் ரயில்கள் குறிப்பிட்ட நேரத்திற்கு மட்டும் மாற்றுப் பாதையில் இயக்கப்பட்டன. வடமாநிலங்களில் இருந்து ஆந்திரா வழியே சென்னை வரும் எக்ஸ்பிரஸ் ரயில்கள் வழக்கம்போல அதே பாதையில் சென்றன.

மேலும், ரயில் சேவை ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில் பயணிகள் வசதிக்காக 10 சிறப்பு ரயில்களும் இயக்கப்பட்டன. சென்னை சென்ட்ரலில் இருந்து பொன்னேரி வரை 2 ரயில்களும், எண்ணூர் வரை 1 ரயில், மீஞ்சூர் வரை 1 ரயில், சென்னை கடற்கரையில் இருந்து பொன்னேரி வரை 1 ரயில் உட்பட 5 ரயில்கள் இயக்கப்பட்டன. மறு மார்க்கத்தில் பொன்னேரியில் இருந்து 3 ரயில்களும், எண்ணூரில் இருந்து 1 ரயில், மீஞ்சூரில் இருந்து 1 ரயில் உட்பட 5 ரயில்கள் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு இயக்கப்பட்டன. தண்டவாள பராமரிப்பு பணிகள் காரணமாக குறைந்த அளவு ரயில்கள் இயங்குவதாலும், நேற்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாள் என்பதாலும் பயணிகள் கூட்டமின்றி பொன்னேரி ரயில் நிலையம் வெறிச்சோடி காணப்பட்டது.

The post தண்டவாள பராமரிப்பு பணிகள் காரணமாக பயணிகளின்றி வெறிச்சோடிய பொன்னேரி ரயில் நிலையம்: குறைந்த அளவு ரயில்களே இயக்கம் appeared first on Dinakaran.

Read Entire Article