தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் தயாரிப்பு தொழிற்சாலைகள் குறித்து தகவல் தெரிவிக்கலாம்: மாசு கட்டுப்பாடு வாரியம் அறிவிப்பு

3 months ago 18

சென்னை: தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை உற்பத்தி செய்யும் தொழிற்சாலை தொடர்பாக பொதுமக்கள் தகவல் தெரிவிக்கலாம், என தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் தெரிவித்துள்ளது. தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் வெளியிட்ட அறிக்கை: ஒருமுறை பயன்படுத்தி தூக்கி எறியப்படும் பிளாஸ்டிக் பொருட்களின் மீதான தடை அறிவிப்பை, சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை, தமிழக அரசு 2018ம் ஆண்டு ஜூன் 25ம் தேதி நாளிட்ட அரசாணை வெளியிட்டது. சுற்றுச்சூழல் வனம் மற்றும் காலநிலை மாற்றம் அமைச்சகம், 100 மைக்ரானுக்கு குறைவான பிளாஸ்டிக் அல்லது பிவிசி விளம்பர பதாகைகள், முட்கரண்டி, கரண்டிகள், கத்திகள், உறிஞ்சு குழாய்கள், தட்டுகள் மற்றும் அழைப்பிதழ்கள், சிகரெட் பாக்கெட்டுகள் மேல் சுற்றப்பட்டுள்ள பிளாஸ்டிக் தாள்கள் போன்ற தூக்கி எறியப்படும் பிளாஸ்டிக்கினை தடை செய்துள்ளது.

வழக்கமான ஆய்வுகள் மற்றும் புகார்களின் அடிப்படையில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை உற்பத்தி செய்யும் தொழிற்சாலைகள் கண்டறியப்பட்டு இதுவரை வாரியத்தால் 240 பிளாஸ்டிக் உற்பத்தி செய்யும் தொழிற்சாலைகள் மூடப்பட்டுள்ளன. மேற்கூறியவற்றை மீறி, சட்டவிரோதமாக செயல்படும் பிளாஸ்டிக் உற்பத்தியாளர்களை கண்டறிவது சவாலாக உள்ளது. எனவே, சுற்றுச்சூழல் மீது அக்கறை கொண்ட பொதுமக்கள் மற்றும் தடை செய்யப்பட்ட பொருட்கள் உற்பத்தி செய்யும் தொழிற்சாலைக்கு அருகில் குடியிருப்பவர்கள் சட்ட விரோதமாக இயங்கும் தொழிற்சாலைகள் பற்றிய விவரங்களை தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியத்திற்கு தெரிவிக்கலாம். புகார்களை மாசு கட்டுப்பாடு வாரியத்தின் அந்தந்த மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர்களிடம் தெரிவிக்கலாம், அவர்களின் தொடர்பு விவரங்கள் வாரியத்தின் இணையதளத்தில் (https://tnpcb.gov.in/contact.php) கொடுக்கப்பட்டுள்ளன. புகார்களை மின்னஞ்சல், கடிதம், தொலைபேசி அழைப்புகள், வாட்ஸ் அப் மூலம் பதிவு செய்யலாம். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

The post தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் தயாரிப்பு தொழிற்சாலைகள் குறித்து தகவல் தெரிவிக்கலாம்: மாசு கட்டுப்பாடு வாரியம் அறிவிப்பு appeared first on Dinakaran.

Read Entire Article