பெ.நா.பாளையம், அக்.15: கோவை சின்ன தடாகம், பெரிய தடாகம், பன்னீமடை, மாங்கரை பகுதிகளில் 100க்கும் மேற்பட்ட செங்கல் சூளைகள் இயங்கி வந்தன. இந்நிலையில், பசுமை தீர்ப்பாயத்தின் நடவடிக்கை மற்றும் நீதிமன்ற உத்தரவுக்கு பின் அனைத்து செங்கல் சூளைகளும் பல ஆண்டுகளாக மூடப்பட்டுள்ளன. இந்நிலையில், செங்கல் உற்பத்தியின்போது பச்சை கல்லை வேக வைக்கும்போது ஏற்படும் புகையை வெளியேற்ற உயரமான புகைப்போக்கி கோபுரங்கள் கட்டப்பட்டுள்ளன. தற்போது, செங்கல் உற்பத்தி இல்லாததால் அந்த கோபுரங்கள் பல இடங்களில் சேதமடைந்து காணப்படுகிறது.
இந்நிலையில், தடாகம் தண்ணீர் பந்தலில் உள்ள கிருஷ்ணசாமி என்பவரின் செங்கல் சூளையில் இருந்த புகைப்போக்கி கோபுரம் தொடர் மழையின் காரணமாக நேற்று மதியம் இரண்டு மணியளவில் கோவை-ஆனைக்கட்டி ரோட்டின் மேல் திடீரென உடைந்து விழுந்தது. இதனால் சாலை முழுவதும் செங்கற்கள் சிதறியதால் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தடாகம் போலீசார் ஜே.சி.பி. மூலம் உடைந்த செங்கற்களை அப்புறப்படுத்தி போக்குவரத்தை சரி செய்தனர். கோபுரம் இடிந்து விழுந்தபோது சாலையில் வாகனங்கள் ஏதும் செல்லாததால் எந்த விதமான அசம்பாவிதமும் ஏற்படவில்லை.
The post தடாகம்-ஆனைக்கட்டி சாலையில் செங்கல் சூளை புகைப்போக்கி கோபுரம் இடிந்து விழுந்து சேதம் appeared first on Dinakaran.