தஞ்சாவூர், பிப். 11: தஞ்சை கீழவாசல் சின்ன அரிசிக்கார தெருவில் குரங்குகள் தொல்லையைக் கட்டுப்படுத்த வன அலுவலர்கள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தஞ்சை மாநகரில் குரங்குகள் தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வருகின்றன. குறிப்பாக தஞ்சை கீழவாசல் சின்ன அரிசிக்கார தெருவில் குரங்குகள் தொல்லை அதிகமாக உள்ளது. கூட்டம் கூட்டமாக வந்து வீடுகளுக்குள் புகுந்து பொருட்களை நாசம் செய்வதோடு, மக்களை பல்வேறு இன்னல்களுக்கு ஆளாக்கி வருகிறது.
சிறுவர்களை கண்டால் விரட்டுவதும், சிறுவர்கள் கையில் இருக்கும் பொருட்களை பிடுங்கி செல்வதுமாக உள்ளது. குரங்கு தொல்லையால் மக்கள் என்ன செய்வது என்று தெரியாமல் திகைத்து வருகிறார்கள். எனவே, மாநகராட்சி, வனத்துறை அதிகாரிகள் குரங்குகளை பிடித்து வனப்பகுதியில் விட வேண்டும் என்று பொது மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.
The post தஞ்சை கீழவாசல் பகுதியில் குரங்கு தொல்லையால் மக்கள் அவதி appeared first on Dinakaran.