தஞ்சை: தஞ்சை அருகே அம்மன்பேட்டை அடுத்த ராஜேந்திரம் கிராமத்தில் அந்தோணியார் ஆலய திருவிழா நடந்து வருகிறது. இதையொட்டி நேற்றிரவு தேர் பவனி நடந்தது. தேரில் அந்தோணியார் வலம் வந்தார். இதில் ராஜேந்திரத்தை சேர்ந்த ஸ்டாலின் உள்பட ஏராளமானோர் தேரை இழுத்து வந்தனர். விடிய விடிய நடந்த தேர் பவனி, இன்று அதிகாலை 5 மணியளவில் தெற்கு தெருவுக்கு வந்தது. அப்போது அப்பகுதியை சேர்ந்த ஒரு தரப்பு வாலிபர்கள் நடனமாடி கொண்டிருந்தனர். இதை, தேரிழுத்து வந்த தரப்பினர் ஓரமாக நடனமாடும்படி கூறினர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்ததால் வாக்கு வாதம் ஏற்பட்டு மோதலானது.
இதில் நடனமாடிய தரப்பினர், கத்தியால் ஸ்டாலினின் நெற்றியில் குத்தினர். இதனால் அவர் ரத்த வெள்ளத்தில் சரிந்தார். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. அங்கிருந்தவர்கள், அவரை தஞ்சை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இதுகுறித்து நடுக்காவேரி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் வர தாமதமானதால் கிராம மக்கள் திரண்டு அம்மன்பேட்டை மெயின்ரோட்டில் அமர்ந்து இன்று காலை மறியலில் ஈடுபட்டனர். தகவலறிந்து போலீசார் சென்று, அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதனால் மறியல் கைவிடப்பட்டது. இச்சம்பவம் தொடர்பாக வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
The post தஞ்சை அருகே தேர் பவனியில் வாலிபருக்கு கத்திக்குத்து: கிராம மக்கள் சாலை மறியல் appeared first on Dinakaran.