தஞ்சாவூர் மாவட்டத்தில் விவசாயிகளுக்கு இதுவரை வங்கி கணக்கில் ரூ.36 கோடி வரவு

3 months ago 23

தஞ்சாவூர் செப்.29: விவசாயிகளுக்கு இதுவரை வங்கி கணக்கு மூலம் ரூ.36 கோடி ரூபாய் வரவு வைக்கப்பட்டுள்ளது என தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக மண்டல மேலாளர் (பொறுப்பு) கார்த்திகைசாமி தகவல் தெரிவித்துள்ளார்.

இது குறித்த அவர் கூறியதாவது:
ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் மாதம் 1ம் தேதி முதல் மறு வருடம் செப்டம்பர் 30ம் தேதி வரை நெல் கொள்முதல் செய்யப்படும் காலமாகும். தற்போது செப்டம்பர் 1ம் தேதி முதல் மறு வருடம் ஆகஸ்ட் 31ம் தேதி வரை நெல் கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது. மத்திய அரசின் பரவலாக்கப்பட்ட நெல் கொள்முதல் திட்டத்தின் கீழ் கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை சார்பில் நடப்பு ஆண்டு கோடை குறுவைப்பருவம் 2024-2025-க்கு கடந்த செப். 1ம் தேதி முதல் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. இதுவரை 149 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டு 27.09.2024 வரை 133 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் செயல்பட்டு வருகிறது.

மேலும் நெல் வரத்துக்கு ஏற்றவாறு விவசாயிகளின் நலன்கருதி மாவட்ட ஆட்சியர் அனுமதியுடன் தேவையின் அடிப்படையில் நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. செப். 1 முதல் நெல்லுக்கு அரசால் நிர்ணயிக்கப்பட்டுள்ள புதிய ஆதார விலை மற்றும் ஊக்கத்தொகை வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி கிரேட் ஏ நெல் ரகத்திற்கு குறைந்தபட்ச ஆதார விலை ரூ. 2,320வுடன் ஊக்கத்தொகை ரூ. 130 சேர்த்து ரூ. 2450 மற்றும் பொது ரக நெல்லிற்கு குறைந்தபட்ச ஆதார விலை ரூ. 2,300வுடன் ஊக்கத்தொகை ரூ. 105 சேர்த்து ரூ. 2405 வழங்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் விவசாயிகளின் நலன்கருதி கொள்முதல் செய்யப்படும் நெல்லுக்கு சென்ற ஆண்டு போலவே 17% வரை ஈரப்பத தளர்வு செய்யப்பட்டும், பருவமழை மற்றும் இதர காரணங்களினால் சேதம் அடைந்த, முளை விட்ட மற்றும் பூச்சி துளைத்த தானியங்கள் 5% மிகாமல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. மேலும் விவசாயிகளின் நலன் கருதி மாவட்ட கலெக்டரின் அனுமதி பெற்று அனைத்து வருவாய் வட்டங்களிலும் தற்போது 133 கொள்முதல் நிலையங்கள் செயல்பாட்டில் உள்ளது. இந்த பருவத்தில் இதுநாள் வரை மொத்தம் 22,788 மெ.டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.

அதன்படி தஞ்சாவூரில் 3136.600, திருவையாறில் 5117.200, பூதலூரில் 258.360, ஒரத்தநாட்டில் 2545.320, பட்டுக்கோட்டையில் 700.880, பேராவூரணி 862.520, கும்பகோணத்தில் 963.240, திருவிடைமருதூரில் 5549.600, பாபநாசத்தில் 3654.360 என்ன மொத்தமாக 22788.080 மெ.டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.
மேலும், 1.8.2024 முதல் 24.9.2024 வரை நேரடி நெல்கொள்முதல் நிலையம் மூலம் 4,667 விவசாய பயனாளிகள் பயனடைந்துள்ளனர். விற்பனை செய்யப்படும் நெல்லிற்கு உண்டான தொகை விவசாயிகளுக்கு ரூ.36 கோடி மின்னனு வங்கிப்பண பரிவர்த்தனை மூலமாக வழங்கப்பட்டுள்ளது. இவ்வாறு கார்த்திகைசாமி தெரிவித்துள்ளார்.

The post தஞ்சாவூர் மாவட்டத்தில் விவசாயிகளுக்கு இதுவரை வங்கி கணக்கில் ரூ.36 கோடி வரவு appeared first on Dinakaran.

Read Entire Article