தஞ்சாவூர், மே 16: தஞ்சாவூர் நாஞ்சிக்கோட்டை சாலையிலுள்ள ஆவின் நிறுவன வளாகத்தில் புதிதாகக் கட்டப்பட்டு வரும் பால் பண்ணை கட்டுமானப் பணிகளை நேற்று மாலை அமைச்சர் மனோ தங்கராஜ் ஆய்வு செய்தார்.
பின்னர் அவர் நிரூபர்களுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்ததாவது:
தமிழகத்தில் நேற்றைய நிலவரப்படி 33.18 லட்சம் லிட்டர் கொள்முதல் செய்யப்படுகிறது. ஆவின் பால் பூத் யார் விரும்பிக் கேட்டாலும், குறிப்பிட்ட இடைவெளி விட்டு, பூத் அமைக்க அனுமதி வழங்கத் தயாராக இருக்கிறோம். மாநில அளவில் நிறைய பேர் புதிதாக பூத் அனுமதி பெற்று நடத்துகின்றனர். பால் உற்பத்தியைப் பெருக்குவதற்காக கடந்த ஒன்றரை ஆண்டில் ரூ.1,000 கோடிக்கும் அதிகமாக விவசாயிகளுக்கு கடன் வழங்கப்பட்டுள்ளது. பால் கூட்டுறவு சங்கங்கள் புதிதாக நிறைய திறக்கப்பட்டு வருகின்றன. எந்தெந்த கிராமங்களில் கூட்டுறவு பால் சங்கங்கள் இல்லையோ, அங்கே கூட்டுறவு சங்கங்கள் தொடங்குவதற்கான உத்தரவு பிறப்பிக்கப்பட்டு, முழுவீச்சில் பணிகள் நடைபெறுகின்றன. இவ்வாறு அவர் கூறினார்.
இந்த ஆய்வின்போது, பால் உற்பத்தி மற்றும் பால் பண்ணை மேம்பாட்டுத் துறை ஆணையர் அண்ணாதுரை, மாவட்ட ஆட்சியர் பிரியங்கா பங்கஜம், மாநிலங்களவை உறுப்பினர் கல்யாணசுந்தரம், சட்டப்பேரவை உறுப்பினர் டி.கே.ஜி. நீலமேகம் உள்ளிட்டோர் உடனிருந்தனர். பின்னர் ஆட்சியரகத்தில், மாவட்டத்தில் பால் உற்பத்தியை அதிகப்படுத்துவது தொடர்பான ஆய்வுக் கூட்டத்தில் அமைச்சர் பங்கேற்று அலுவலர்களுக்கு ஆலோசனைகளை வழங்கினார்.
முன்னதாக கும்பகோணம் அருகே திப்பிராஜபுரம் பால் கூட்டுறவு சங்கத்தில் உள்ள மொத்த குளிர்விப்பான் நிலையத்தில் தமிழ்நாடு பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் ஆய்வு செய்தார். அப்போது ஐஓடி ஆன்லைன் சிஸ்டம் மூலமாக சுலபமான முறையில், மிகவும் விரைவில் பால் எடுப்பது மற்றும் அளவு, தரம் காண்பது ஆகியவை குறித்து ஆய்வு செய்து அதிகாரிகளிடம் பயன்களை கேட்டறிந்தார். தொடர்ந்து செய்தியாளர்களிடம் அமைச்சர் மனோ.தங்கராஜ் கூறியதாவது: விவசாயிகள் இங்கு வந்து பால் கொடுத்தால் உடனடியாக அந்த பாலின் அளவு, தரம் இரண்டையும் பார்த்து அதற்கு ஏற்றபடி அந்த விலைக்கான ரசீதை அவர்களது தொலைபேசி எண்ணிற்கு குறுஞ்செய்தியாகவும், அதேபோல கையில் பில்லாகவும் கொடுக்கின்றோம்.
அதே நேரத்தில் நாங்கள் கண்காணிப்பது முழுவதும் ஆன்லைனில் பதிவாகிவிடும். எனவே இது ஒரு நல்ல திட்டம். விவசாயிகளின் பால் தரத்திற்கேற்ற விலை கிடைப்பதற்கான ஒரு அற்புதமான திட்டம் நடைமுறையில் உள்ளது. தமிழ்நாடு முழுவதும் 9ஆயிரத்துக்கும் மேற்பட்ட கூட்டுறவு சங்கங்களில் இந்த திட்டம் முழுமையாக நடைமுறைப்படுத்தப்படும். ஆவினில் பால்கோவா, முறுக்கு, பிஸ்கட் உள்ளிட்ட 200க்கும் மேற்பட்ட தயாரிப்புகள் உள்ளது. எனவே அனைத்து பொருட்களும் இங்கேயே வாங்கலாம்.
இந்த ஆய்வின்போது எம்பி கல்யாணசுந்தரம், கும்பகோணம் மேற்கு ஒன்றிய செயலாளர் முத்துசெல்வம், முன்னாள் துணைத்தலைவர் இளங்கோவன், செயலாளர் அருணாச்சலம், மொத்த பால் குளிர்விப்பான் நிலைய பொறுப்பாளர் அனுப்பிரியா ஆகியோர் பங்கேற்றனர்.
The post தஞ்சாவூர் நாஞ்சிக்கோட்டையில் ரூ.54 கோடியில் புதிய பால் பண்ணை: கட்டுமானப் பணிகளை அமைச்சர் ஆய்வு appeared first on Dinakaran.