![](https://media.dailythanthi.com/h-upload/2025/02/10/38712421-untitled-7.webp)
தஞ்சாவூர்,
தஞ்சை மாவட்டம், பட்டுக்கோட்டை அடுத்த சொக்கநாதபுரம் ஒத்தக்கடை பகுதியைச் சேர்ந்தவர் கண்ணன். இவரது மனைவி பரிமளா. இவர்களது மகள் கவிபாலா (13 வயது). கவிபாலா பள்ளத்தூர் அரசு உயர்நிலைப்பள்ளியில் 7-ம் வகுப்பு படித்து வந்தார். இந்த நிலையில் இன்று மாணவி கவிபாலா பள்ளியில் விளையாடிக் கொண்டிருந்தபோது திடீரென மயங்கி விழுந்தார். அப்போது அவரது மூக்கிலிருந்து ரத்தம் வந்ததாக தெரிகிறது.
உடனடியாக மாணவி கவிபாலாவை அருகிலிருந்த ஆசிரியர்கள் பள்ளத்தூர் அருகில் உள்ள அழகியநாயகிபுரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கொண்டு சென்றனர். அங்கு மாணவியை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கெனவே உயிரிழந்ததாக தெரிவித்தனர். இதையடுத்து மாணவியின் உடல் பிரேத பரிசோதனைக்காக பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
பள்ளத்தூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் பயிலும் மாணவ, மாணவிகளுக்கு இன்று குடற்புழு நீக்க மாத்திரைகள் வழங்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் அந்த மாத்திரையை சாப்பிட்ட பிறகே மாணவி மயங்கி விழுந்து உயிரிழந்ததாக கூறப்படுகிறது. மேலும் இரண்டு மாணவிகளின் உடல்நலம் பாதிக்கப்பட்டதாகவும், அவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் தெரிய வந்துள்ளது.