குலசேகரன்பட்டினம்,
தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினம் ஞானமூா்த்தீஸ்வரர் உடனுறை முத்தாரம்மன் கோவிலில் ஆண்டுதோறும் தசரா திருவிழா நடைபெறும். மைசூருக்கு அடுத்தபடியாக இங்கு தான் தசரா திருவிழா வெகு சிறப்பாக கொண்டாடப்படுகிறது.
இந்த ஆண்டுக்கான திருவிழா கடந்த 3ம் தேதி கொடியேற்றத்துடன் கோலாகலமாக தொடங்கியது. 10 நாட்கள் நடைபெறும் இந்த திருவிழாவில் ஒவ்வொரு நாளும் அம்மன் பல்வேறு வாகனங்களில் வெவ்வேறு திருக்கோலத்தில் எழுந்தருளி, வீதி உலா சென்று பக்தர்களுக்கு அருள்பாலிப்பார்.
அந்த வகையில் 3-ம் திருவிழாவான நேற்று காலை 8 மணி முதல் இரவு 7 மணி வரை கோவிலில் சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றது. மேலும் மாலை 3 மணி முதல் இரவு 7 மணி வரை கலையரங்கத்தில் சமய சொற்பொழிவும் நடைபெற்றது. அதனை தொடர்ந்து இரவு 10 மணிக்கு ரிஷப வாகனத்தில் பார்வதி திருக்கோலத்தில் முத்தாரம்மன் எழுந்தருளி திருவீதி உலா சென்று பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இந்த கோலத்தில் அம்மனை தரிசித்தால் நலம் கிடைக்கும் என்பது ஐதீகம். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.