தங்கம் விலையில் அதிரடி மாற்றம் ஒரே நாளில் பவுனுக்கு ரூ.1,280 குறைந்தது

4 hours ago 2

சென்னை: தங்கம் விலை தொடர்ச்சியாக அதிகரித்து புதிய உச்சத்தை தொட்டு வந்த நிலையில் நேற்று அதிரடியாக பவுனுக்கு ரூ.1,280 குறைந்தது. தங்கம் விலை இந்தாண்டு தொடக்கத்தில் இருந்து உயர்ந்து வருகிறது. அதிலும் கடந்த மார்ச் மாதம் பெரும்பாலான நாட்கள் தங்கம் விலை தினம், தினம் புதிய உச்சத்தை ெதாட்டு வந்தது. இந்நிலையில் கடந்த 1ம் தேதி தங்கம் விலை பவுன் ரூ.68,080 என்ற புதிய உச்சத்தை தொட்டது. தொடர்ந்து 2ம் தேதி தங்கம் விலையில் எந்தவித மாற்றமுமின்றி ஒரு பவுன் ரூ.68,080க்கு விற்பனையானது.

நேற்று முன்தினம் மீண்டும் தங்கம் விலை அதிரடியாக உயர்வை சந்தித்தது. அதாவது கிராமுக்கு ரூ.50 அதிகரித்து ஒரு கிராம் ரூ.8,560க்கும், பவுனுக்கு ரூ.400 அதிகரித்து ஒரு பவுன் ரூ.68,480க்கு விற்பனையானது. அதே நேரத்தில் இந்த விலை என்பது தங்கம் விலை வரலாற்றில் அதிகப்பட்ச விலை என்ற புதிய உச்சத்தையும் கண்டது. தங்கம் விலை ஜெட் வேகத்தில் அதிகரித்து வந்தது நகை பிரியர்களை கடும் அதிர்ச்சியடைய செய்து வந்தது.

தொடர் ஏற்றத்திற்கு பிறகு நேற்று யாரும் எதிர்பார்க்காத வகையில் தங்கம் விலையில் அதிரடி மாற்றம் காணப்பட்டது. அதாவது, தங்கம் விலை அதிரடி சரிவை கண்டிருந்தது. கிராமுக்கு ரூ.160 குறைந்து ஒரு கிராம் ரூ.8,400க்கும், பவுனுக்கு ரூ.1,280 குறைந்து ஒரு பவுன் ரூ.67,200க்கும் விற்பனையானது. அதேபோல, வெள்ளியின் விலையும் சரிவை சந்தித்தது.

வெள்ளி விலை கிராமுக்கு ரூ.4 குறைந்து ரூ.108க்கும், ஒரு கிலோ ரூ.1 லட்சத்து 8 ஆயிரத்துக்கும் விற்பனையானது. தங்கம் விலை அதிரடி சரிவு நகை வாங்குவோருக்கு சற்று நிம்மதியை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவைச் சேர்ந்த பங்குச் சந்தை நிபுணர் ஒருவர், தங்கத்தின் விலை 38 சதவீதம் வரை வீழ்ச்சி அடையும் என்று தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

The post தங்கம் விலையில் அதிரடி மாற்றம் ஒரே நாளில் பவுனுக்கு ரூ.1,280 குறைந்தது appeared first on Dinakaran.

Read Entire Article