பெங்களூரு: தக் லைஃப் தொடர்பான உச்சநீதிமன்ற உத்தரவை அனைவரும் மதிக்க வேண்டும் என கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவகுமார் தெரிவித்துள்ளார். முன்னதாக தக் லைஃப் படம் ப்ரொமோஷன் நிகழ்ச்சியில், கன்னடம் – தமிழ் உறவுக் குறித்து நடிகர் கமல்ஹாசன் பேசியது சர்ச்சைக்குள்ளானது. இதனால் கமல்ஹாசன் மன்னிப்பு கேட்கவேண்டும் என்று கன்னட அமைப்புகள் பல கண்டனம் தெரிவித்த நிலையில், கர்நாடகாவில் படம் வெளியாகவில்லை. இதைத் தொடர்ந்து, தக் லைஃப் படத்தை திரையிடும்போது பாதுகாப்பு வழங்கக் கோரி கர்நாடக திரையரங்கு உரிமையாளர்கள் சங்கம் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது.
இந்த மனு மீதான விசாரணையில், கர்நாடகாவில் தக் லைஃப் படத்துக்கு தடை விதிக்க முடியாது என உச்சநீதிமன்றம் திட்டவட்டமாக தெரிவித்தது. மேலும் கும்பல் மற்றும் பாதுகாவலர்கள் தெருக்களில் ஆக்கிரமிக்க அனுமதிக்க முடியாது என்று உச்சநீதிமன்றம் கூறியது. இந்நிலையில், உச்சநீதிமன்றத்தின் உத்தரவை அடுத்து செய்தியாளர்களிடம் பேசிய கர்நாடக துணை முதல்வர் டி.கே. சிவகுமார், உச்சநீதிமன்ற உத்தரவை நாம் மதிக்க வேண்டும். அனைவருக்கும் வரம்புகள் உள்ளன. நமக்கு வரம்புகள் இருக்க வேண்டும் என்று பல்வேறு அமைப்புகளிடம் நான் வேண்டுகோள் விடுக்கிறேன் என்றார்.
அனைத்து கன்னட ஆர்வலர்களையும் நான் கேட்டுக்கொள்கிறேன், தயவுசெய்து அமைதியாக இருங்கள். யாரும் சட்டத்தை கையில் எடுக்கக் கூடாது என்றும் அவர் கூறினார். கருத்தை வெளிப்படுத்துவதில் எந்தத் தவறும் இல்லை. கர்நாடகா எப்போதும் அமைதியை விரும்பும் மாநிலமாக இருந்து வருகிறது என்பதை அடிக்கோடிட்டுக் காட்டிய அவர், பெங்களூரு மக்கள் தாராளமாக இருக்க வேண்டும் என்று அவர் வேண்டுகோள் விடுத்தார். பெங்களூரில் அனைத்து சாதிகள், மொழிகள் மற்றும் கலாச்சாரத்தை நாங்கள் ஏற்றுக்கொண்டுள்ளோம். இது ஒரு சர்வதேச நகரம். கர்நாடக மக்கள் எப்போதும் பரந்த மனப்பான்மை கொண்டவர்கள் என்று அவர் கூறினார்.
The post தக் லைஃப் படம்.. உச்சநீதிமன்ற உத்தரவை மதிக்க வேண்டும்; யாரும் சட்டத்தை கையில் எடுக்கக்கூடாது: டி.கே.சிவகுமார் வேண்டுகோள்!! appeared first on Dinakaran.