தகுதியுள்ள அனைவருக்கும் மகளிர் உரிமைத்தொகை

1 month ago 6

*திமுக கிழக்கு மாவட்ட செயலாளர் மேயர் மகேஷ் பேச்சு

நாகர்கோவில் : தகுதியுள்ள அனைவருக்கும் மகளிர் உரிமைத்தொகை வழங்கப்படும் என தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உறுதியளித்துள்ளதாக திமுக கிழக்கு மாவட்ட செயலாளர் மேயர் மகேஷ் தெரிவித்தார். கலைஞர் நூற்றாண்டு நிறைவு விழா, திமுக பவள விழா மற்றும் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் 47வது பிறந்தநாள் விழா ஆகியன நேற்று நாகர்கோவிலில் குமரி கிழக்கு மாவட்ட திமுக அலுவலகத்தில் கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட திமுக தொண்டர் அணி சார்பில் நடைபெற்றது.

மாவட்ட தொண்டரணி அமைப்பாளர் எம்.ஜே.ராஜன் தலைமை வகித்தார். மாநகர திமுக செயலாளர் ஆனந்த், தொண்டரணி துணை அமைப்பாளர்கள் ஜாப்ரின், மணிகண்டன், ரெனீஸ் குமார், வேல்முருகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். துணை அமைப்பாளர் கோலப்பன் வரவேற்றார். கிழக்கு மாவட்ட அவை தலைவர் எப்.எம்.ராஜரத்தினம், மாநில மகளிர் அணி செயலாளர் ஹெலன் டேவிட்சன், மாநில நிர்வாகிகள் தாமரை பாரதி, தில்லை செல்வம், ஒன்றிய செயலாளர்கள் பாபு சுரேந்திர குமார், தலைமை செயற்குழு உறுப்பினர் சதாசிவன், பொதுக்குழு உறுப்பினர்கள் ரமணன், அணி நிர்வாகிகள் அகஸ்தீசன், அருண்காந்த், சரவணன், ராதாகிருஷ்ணன், பகுதி செயலாளர் ஜவஹர், ஷேக்மீரான், துரை உட்பட பலர் கலந்துகொண்டனர்.

விழாவில் நலத்திட்ட உதவிகள் வழங்கி குமரி கிழக்கு மாவட்ட திமுக செயலாளர் மேயர் மகேஷ் கலந்துகொண்டு பேசியதாவது:மன்னராட்சி என்றால் என்ன? மக்களாட்சி என்றால் என்ன? என்று தெரியாமல் சிலர் பேசுகிறார்கள். ஐந்து முறை தமிழ்நாட்டை ஆண்டவர் நமது இயக்கத் தலைவர் கலைஞர். அவர் வாரிசு அடிப்படையில் வரவில்லை. சட்டமன்ற உறுப்பினர்கள் தேர்ந்தெடுத்து தான் கலைஞர் முதலமைச்சர் ஆனார். ஆர்.எஸ்.எஸ் காரர்களை பார்த்து கவர்னராக நியமிக்கின்ற ஆட்சி அல்ல இது. மக்களால் வாக்களித்து வெற்றி பெற்று சட்டமன்ற உறுப்பினராகி, சட்டமன்ற உறுப்பினர் தான் முதலமைச்சரை தேர்வு செய்கிறார்கள்.

கலைஞர் குடும்பம் மக்களுக்கு பல நல்ல திட்டங்களை கொண்டு வந்திருக்கிறது. அடுத்ததும் நமது முதல்வர் தான், மக்கள் வாக்களித்து சட்டமன்ற உறுப்பினர்கள் அவரை தேர்ந்தெடுப்பார்கள். தலைவர் கலைஞரும், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினும் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மன்னர்கள்தான். மகளிர் உரிமைத்தொகை அத்தனை பேருக்கும் கிடைக்கிறது, அதிலே தகுதியுள்ள மகளிருக்கு உரிமை தொகை கிடைக்கவில்லை என்று கூறுகின்றனர்.

இதனை தமிழக துணை முதல்வர் கவனத்திற்கு கொண்டு சென்றோம். தகுதியுள்ள அனைவருக்கும் மகளிர் உரிமைத் தொகை கிடைக்கும் என துணை முதல் அமைச்சர் உறுதி அளித்துள்ளார். சொல்வதை மட்டுமல்ல சொல்லாத்ததையும் செய்கின்றது திராவிட மாடல் திமுக ஆட்சி. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

The post தகுதியுள்ள அனைவருக்கும் மகளிர் உரிமைத்தொகை appeared first on Dinakaran.

Read Entire Article