கள்ளக்குறிச்சி,
கள்ளக்குறிச்சி மாவட்டம் தச்சூரில் தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்து அவர் பேசியதாவது;
தமிழ்நாட்டிற்கு தமிழ் தான் முக்கியம். இங்கு யாரும் எந்த மொழியையும் திணிக்க முடியாது எனவும், ஒருவர் விரும்பினால் மட்டுமே அந்த மொழியை கற்க முடியும். யாரும் திணிக்க முடியாது. 'நுணலும் தன் வாயால் கெடும்' என்பது போல் பேசத் தெரியாமல் பேசி நடிகை கஸ்தூரி மிகப்பெரிய சிக்கலில் மாட்டி கொண்டுள்ளார் என தெரிவித்தார்.
பெண்களை தவறாக பேசியது கண்டிக்கத்தக்கது, ஆனால் எத்தனையோ தலைவர்கள் என்னென்னவோ பேசி இருக்கிறார்கள். அவர்களையெல்லாம் கைது செய்யவில்லை. ஆனால் தீவிரவாதியை போன்று ஹைதராபாத்திற்கு சென்று போலீசார் கஸ்தூரியை கைது செய்துள்ளனர். இது வேதனைக்குரியது. ஒரு பெண்ணான அவருக்கு இது போன்று நடந்துள்ளது அநியாயம். என்றார்.
அப்போது த.வெ.க.வுடன் கூட்டணி வைப்பீர்களா? என செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, "கூட்டணி அமைப்பது குறித்து விஜய்யிடம் கேளுங்கள். அதிமுக தலைமையில் நல்லதொரு கூட்டணி அமையும்." என தெரிவித்தார்.