
சென்னை,
சென்னை வியாசர்பாடி தீ விபத்து சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு த.வெ.க. பெண் நிர்வாகிகள் நல உதவி வழங்கியுள்ளனர். அப்போது பெண் நிர்வாகிகள் தாக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த சம்பவத்திற்கு சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகம் விளக்கம் அளித்துள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது:-
"வியாசர்பாடி சத்தியமூர்த்தி நகர் குடிசைபகுதியில் ஏற்பட்ட தீ விபத்திற்கு பிறகு சில அமைப்பின் நிர்வாகிகள் காவல்துறையினரால் தாக்கப்பட்டதாக சமூக வலைத்தளங்களில் பரவி வரும் செய்திகளின் தொடர்ச்சியாக பாதிக்கப்பட்ட கூறப்படும் நபர்கள் அளித்த புகார்களின் பேரில் சென்னை பெருநகர வடக்கு மண்டல இணை ஆணையர் கொடுத்த அறிக்கையின்படி, செய்திகளில் வெளியானது போன்று காவல்துறையினரால் மேற்படி அமைப்பின் நிர்வாகிகள் தாக்கப்பட்டதாக தெரியவரவில்லை.
மேலும், அந்த விசாரணையில் ஒரு சிலர் அவர்கள் சார்ந்த கட்சியில் (த.வெ.க.) அங்கீகாரம் பெறுவதற்காக உண்மைக்கு புறம்பான கருத்துக்களை பரப்பி வருவதாக தெரியவருகிறது. இருப்பினும், சென்னை பெருநகர காவல் ஆணையர் இது தொடர்பாக விரிவான விசாரணை மேற்கொள்ள துணை கமிஷனரை நியமித்து உத்தரவிட்டுள்ளார்."
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.