
சென்னை,
நடிகர் விஜய் தொடங்கியுள்ள தமிழக வெற்றிக் கழகத்தின் கொடி அறிமுகப் பாடல், அவரது ரசிகர்கள் மத்தியில் மட்டுமல்லாது பட்டி தொட்டி எங்கும் பிரபலமாகி அனைவரின் வரவேற்பையும் பெற்றுள்ளது.
4.47 நிமிடங்கள் இடம்பெறும் வகையில் அமைந்துள்ள இந்த பாடல், "தமிழன் கொடி பறக்குது.. தலைவன் யுகம் பொறக்குது.. மூன்றெழுத்து மந்திரத்த மீண்டும் காலம் ஒலிக்குது.." என்ற வரிகளுடன் வீரியமாக தொடங்குகிறது. நடிகர் விஜய் மட்டுமல்லாது, அவரது கட்சி நிர்வாகிகள் பங்கேற்கும் நிகழ்ச்சிகளிலும் இந்தப் பாடலே ஒலிபரப்பப்படுகிறது.
இந்த நிலையில், தமிழகத்தில் வரும் 7-ந் தேதி முதல் "மக்களை காப்போம் - தமிழகத்தை மீட்போம்" என்ற தலைப்பில் பிரசாரத்தை தொடங்கும் அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு தயார் செய்யப்பட்டுள்ள பிரசார பாடல் இன்று வெளியிடப்பட்டது.
3.50 நிமிடங்கள் இடம்பெறும் இந்தப் பாடல், "சரித்திர நாயகன்.. சாமானிய நாயகன்.. தமிழக தாயை மீட்க உறுதி கொண்ட ஒரு மகன்.." என்ற வரிகளுடன் தொடங்குகிறது. ஆனால், இந்த பாடலின் ஆரம்ப இசையும், தமிழக வெற்றிக் கழக கொடி பாடலின் தொடக்க இசையும் ஒன்று போல் இருப்பதாக இருக்கட்சி தொண்டர்களும் கூறத் தொடங்கியிருக்கிறார்கள்.
தமிழக வெற்றிக் கழக கொடி பாடலின் இசை, அ.தி.மு.க. பிரசார பாடலுக்கு காப்பியடிக்கப்பட்டு இருப்பதாக பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.