
வாஷிங்டன்,
பூமியில் இருந்து சுமார் 400 கி.மீ. உயரத்தில் உள்ள சுற்றுவட்ட பாதையில் சர்வதேச விண்வெளி நிலையம் உள்ளது. இந்த விண்வெளி நிலையத்துக்கு அமெரிக்கா, ரஷியா உள்ளிட்ட நாடுகளை சேர்ந்த விண்வெளி வீரர்கள், குறிப்பிட்ட கால இடைவெளியில் ஆராய்ச்சி பணிக்காக சுழற்சி முறையில் விண்கலம் மூலம் அனுப்பப்படுவார்கள்அவர்கள் அங்கு தங்கியிருந்து, தங்கள் பணிகள் முடிந்ததும் மீண்டும் பூமிக்கு அழைத்து வரப்படுவார்கள்.
அதுபோல் இந்திய வம்சாவளியை சேர்ந்த சுனிதா வில்லியம்ஸ், அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசா சார்பில், விண்வெளிக்கு கடந்த ஆண்டு ஜூன் மாதம் 5-ந்தேதி அனுப்பப்பட்டார். அவருடன் மற்றொரு வீரரான புட்ச் வில்மோரும் சென்றார். 8 நாட்கள் மட்டுமே தங்கி ஆய்வு செய்யும் திட்டத்துடன் சென்ற அவர்கள், விண்கலத்தில் ஏற்பட்ட கோளாறு காரணமாக 286 நாட்கல் விண்வெளி நிலையத்தில் தங்க வேண்டிய நிலை ஏற்பட்டது. எலான் மஸ்க்கின் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட குரூ டிராகன் என்ற அதிநவீன விண்கலம் மூலம், கடந்த 19 ஆம் தேதி சுனிதா வில்லியம்ஸ், வில்மோர், ஏற்கனவே அங்கு பணியில் இருந்த நிக்ஹேக் (அமெரிக்கா), அலெக்சாண்டர் (ரஷியா) ஆகியோர் பூமிக்கு வந்தனர்.
இந்த நிலையில், தங்கள் விண்வெளி பயணம் தொடர்பாக சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது, தங்களை மீட்டு கொண்டு வர நடவடிக்கை எடுத்த அமெரிக்க அதிபர் டிரம்ப், ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனர் எலான் மஸ்க் ஆகியோருக்கு நன்றி தெரிவித்தனர். மேலும், குறுகிய நாட்களுக்கு தங்கியிருக்கும் திட்டத்துடன் சென்றாலும் நீண்ட காலம் தங்கியிருப்பதற்குமான தயார் நிலையுடன் சென்றதாகவும் கூறியுள்ளனர்.