மும்பை,
இந்திய டெஸ்ட் மற்றும் ஒருநாள் அணியின் கேப்டனான ரோகித் சர்மாவிற்கு நடந்து முடிந்த ஆஸ்திரேலியாவுக்கு எதிரான பார்டர் - கவாஸ்கர் கோப்பை தொடர் அவரது கெரியரில் மோசமான ஒன்றாக அமைந்துள்ளது. தனிப்பட்ட காரணங்களுக்காக முதல் டெஸ்டை தவற விட்ட அவர், அதற்கடுத்த 2, 3 மற்றும் 4-வது போட்டிகளில் கேப்டனாக களமிறங்கினார். இருப்பினும் அந்த போட்டிகளில் அவரது தலைமையில் விளையாடிய இந்திய அணி 2 மற்றும் 4 -வது போட்டிகளில் தோல்வி கண்டது. மழை காரணமாக 3-வது டெஸ்ட் சமனில் முடிந்தது.
இதனையடுத்து சிட்னி மைதானத்தில் நடைபெற்ற 5-வது மற்றும் கடைசி போட்டியில் தானாகவே அணியிலிருந்து வெளியேறினார். இதனால் இந்த தொடர் முடிந்தவுடன் அவர் ஓய்வு அறிவிப்பார் என்று கருத்துகள் நிலவின. ஆனால் தான் இப்போதைக்கு ஓய்வை அறிவிக்கும் எந்த ஒரு முடிவையும் எடுக்கப்போவது இல்லை, கடைசி போட்டியில் இருந்து மட்டுமே விலகியுள்ளேன் என்று ரோகித் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் இந்த தொடரின் 4-வது போட்டி முடிந்த பிறகு ரோகித் சர்மா டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற முடிவெடுத்ததாகவும் ஆனால் அவருடைய நலம் விரும்பிகள் கேட்டுக்கொண்டதால் ஓய்வு முடிவை ரோகித் சர்மா திரும்பப் பெற்றதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
இது குறித்து வெளியான தகவலின் படி, 4-வது டெஸ்ட் போட்டி முடிந்த உடனே ரோகித் சர்மா ஓய்வு முடிவை அறிவிக்க தயாராகினார். ஆனால் அவரது நலம் விரும்பிகள் மற்றும் அவருக்கு நெருக்கமானவர்கள் இன்னும் சில காலம் டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாடலாம் என்று அவரை சமாதானப்படுத்தியதாலே அவர் ஓய்வு முடிவை கடைசி நேரத்தில் மாற்றியதாகவும் கூறப்பட்டுள்ளது.