புதுச்சேரி,
மோட்டார் சைக்கிள்களில் செல்பவர்கள் 'ஹெல்மெட்' அணிவது கட்டாயமாகும். இதை சுப்ரீம் கோர்ட்டும் உறுதி செய்துள்ளது. இதனை தொடர்ந்து புதுச்சேரியில் சாலை விபத்துகளில் 40 சதவீதம் பேர் ஹெல்மெட் அணியாததால் உயிரிழந்ததும் தெரியவந்துள்ளது. எனவே கட்டாய ஹெல்மெட் திட்டத்தை செயல்படுத்த புதுச்சேரி அரசு முடிவு செய்தது.
இதன் முதல்கட்டமாக புதுவை போக்குவரத்து போலீசார் மக்களிடையே பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தினர். பள்ளி, கல்லூரிகளில் மாணவ, மாணவிகளுக்கு போக்குவரத்து விழிப்புணர்வு குறித்த வினாடி-வினா போட்டி நடத்தி ஹெல்மெட்டை பரிசாக வழங்கினார்கள். மேலும் முக்கிய சாலை சந்திப்புகளில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளில் ஈடுபடும்போது ஹெல்மெட் அணிந்து வந்தவர்களுக்கு இனிப்புகள், பூங்கொத்துகள் கொடுத்து ஊக்கப்படுத்தினர்.
இதைத்தொடர்ந்து புத்தாண்டு தினத்தன்று முதல் ஹெல்மெட் கட்டாயம் திட்டத்தை செயல்படுத்த முடிவு செய்யப்பட்டது. ஆனால் மேலும் சில நாட்கள் கழித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி அமல்படுத்த உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் உத்தரவிட்டார்.
அதன்படி, புதுச்சேரி மாநிலத்தில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) முதல் இருசக்கர வாகனங்களில் செல்வோர் கட்டாயம் ஹெல்மெட் அணிவது முறை அமலுக்கு வந்துள்ளது. இதை தவிர்த்தால் ரூ.1,000 அபராதம் விதிக்கப்படும். தொடர்ந்து இதே தவறை செய்தால் 3 மாதங்களுக்கு அவர்களது ஓட்டுனர் உரிமம் ரத்து செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அரசு ஊழியர்கள், கல்லூரி மாணவர்கள் கட்டாயம் ஹெல்மெட் அணிந்து வரவேண்டும் என்று அரசு நிர்வாகம், உயர்கல்வி துறை சார்பில் உத்தரவிடப்பட்டுள்ளது.