புனே,
இந்தியா - நியூசிலாந்து அணிகள் இடையிலான 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி மராட்டிய மாநிலம் புனேயில் நேற்று முன்தினம் தொடங்கியது. இதில் டாஸ் வென்று முதலில் பேட் செய்த நியூசிலாந்து 259 ரன்னில் ஆல்-அவுட் ஆனது. இந்திய சுழற்பந்து வீச்சாளர் வாஷிங்டன் சுந்தர் 7 விக்கெட்டுகளை சாய்த்தார்.
பின்னர் தனது முதல் இன்னிங்சை தொடங்கிய இந்தியா 45.3 ஓவர்களில் 156 ரன்னில் அடங்கியது. அதிகபட்சமாக ஜடேஜா 38 ரன்கள் அடித்தார். நியூசிலாந்து தரப்பில் மிட்செல் சான்ட்னெர் 7 விக்கெட்டுகளை அள்ளினார்.
இதன் மூலம் 103 ரன்கள் முன்னிலை பெற்ற நியூசிலாந்து 2-வது இன்னிங்சை தொடங்கியது. தொடக்க ஆட்டக்காரரான கேப்டன் டாம் லாதம் நிலைத்து நின்று ஆட இன்னொரு பக்கம் சீரான இடைவெளியில் விக்கெட் விழுந்தது. நேற்றைய முடிவில் நியூசிலாந்து 2-வது இன்னிங்சில் 53 ஓவர்களில் 5 விக்கெட்டுக்கு 198 ரன்கள் அடித்திருந்தது. விக்கெட் கீப்பர் டாம் பிளன்டெல் (30 ரன்), கிளென் பிலிப்ஸ் (9 ரன்) களத்தில் இருந்தனர். இந்திய தரப்பில் தமிழகத்தை சேர்ந்த வாஷிங்டன் சுந்தர் 4 விக்கெட்டுகள் கைப்பற்றி இருந்தார்.
இதனையடுத்து 3-வது நாள் ஆட்டம் இன்று நடைபெற்று வருகிறது. தொடர்ந்து பேட்டிங் செய்த நியூசிலாந்து 2-வது இன்னிங்சில் 255 ரன்களில் ஆல் அவுட் ஆனது. இந்தியா தரப்பில் சுந்தர் 4 விக்கெட்டுகளும், ஜடேஜா 3 விக்கெட்டுகளும், அஸ்வின் 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.
இந்தியா 359 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி களமிறங்கியது. அந்த அணிக்கு தொடக்க ஆட்டக்காரர் ஆன ஜெய்ஸ்வால் தனி ஆளாக போராட மறுமுனையில் விக்கெட்டுகள் மளமளவென சரிந்தது. கில் தனது பங்குக்கு 23 ரன்கள் அடித்து ஆட்டமிழந்தார். மிகவும் எதிர்பார்க்கப்பட்ட விராட் கோலி 17 ரன்களில் மீண்டும் சான்ட்னெர் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.
இதன் மூலம் டெஸ்ட் போட்டிகளில் 2 இன்னிங்ஸ்களிலும் விராட் கோலியின் விக்கெட்டை கைப்பற்றிய முதல் இடது கை சுழற்பந்து வீச்சாளர் என்ற மாபெரும் சாதனையை சான்ட்னெர் படைத்துள்ளார்.
இந்திய அணி தற்போது வரை 179 ரன்களுக்குள் 7 விக்கெட்டுகளை இழந்து போராடி வருகிறது.