டாக்கா,
தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி வங்காளதேசத்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆடி வருகிறது. இரு அணிகளுக்கும் இடையிலான முதல் டெஸ்ட் போட்டி டாக்காவில் இன்று தொடங்கியது. இந்த ஆட்டத்திற்கான டாசில் வென்ற வங்காளதேச அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது.
இதையடுத்து வங்காளதேசத்தின் தொடக்க ஆட்டக்காரர்களாக மஹ்முதுல் ஹசன் ஜாய் மற்றும் ஷத்மான் இஸ்லாம் ஆகியோர் களம் இறங்கினர். இதில் மஹ்முதுல் ஹசன் ஜாய் ஒருபுறம் நிலைத்து நின்று ஆட மறுமுனையில் விக்கெட்டுகள் வீழ்ந்த வண்ணம் இருந்தன. இதில் ஷத்மான் இஸ்லாம் ரன் எடுக்காமலும், அடுத்து வந்த மொமினுல் ஹக் 4 ரன், ஷாண்டோ 7 ரன், முஷ்பிகுர் ரஹீம் 11 ரன், லிட்டன் தாஸ் 1 ரன், மெஹதி ஹசன் மிராஸ் 13 ரன் எடுத்த நிலையிலும் அடுத்தடுத்து அவுட் ஆகினர்.
ஒருபுறம் நிலைத்து நின்று ஆடிய மஹ்முதுல் ஹசன் ஜாய் 30 ரன் எடுத்த நிலையில் அவுட் ஆனார். இதைத்தொடர்ந்து களம் இறங்கிய ஜாகர் அலி 2 ரன், நயூம் ஹசன் 8 ரன், தைஜூல் இஸ்லாம் 16 ரன் எடுத்து அவுட் ஆகினர். இறுதியில் வங்காளதேச அணி தனது முதல் இன்னிங்சில் 40.1 ஓவர்களில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 106 ரன்னுக்கு ஆல் அவுட் ஆனது. தென் ஆப்பிரிக்கா தரப்பில் ககிசோ ரபாடா, வியான் முல்டர், கேசவ் மகராஜ் ஆகியோர் தலா 3 விக்கெட் வீழ்த்தினர். இதையடுத்து தென் ஆப்பிரிக்க அணி தனது முதல் இன்னிங்சை ஆடி வருகிறது.