டெல்லியை சூழ்ந்த புகை மண்டலம்...தொடர்ந்து 4வது நாளாக மிகவும் மோசமடைந்த காற்றின் தரம்

1 week ago 3

புதுடெல்லி,

டெல்லியில் கடந்த 3 நாட்களாக காற்று மாசு மிக அதிகமாக இருந்தது. நேற்று மிக மோசமான நிலைக்கு சென்று கடும் பனிமூட்டம் நிலவியது. இந்நிலையில், டெல்லியில் கடந்த 24 மணி நேரத்தில் காற்று தரக் குறியீடு (AQI) 406 ஆக பதிவாகியுள்ளது. காற்றின் தரம் 'கடுமையான' பிரிவில் இருந்ததால், பல்வேறு பகுதியில் இன்று காலை புகை மண்டலம் போல காட்சியளித்தது.

டெல்லியில் 39 காற்று மாசு கண்காணிப்பு மையங்கள் உள்ளன. இவற்றில் 32 மையங்களில் காற்று மாசு தரக் குறியீடு 400-க்கு மேல் பதிவாகியுள்ளது. இதனால் டெல்லியின் ஆனந்த் விஹார் , இந்திராகாந்தி சர்வதேச விமான நிலையம், மந்திர் மார்க், பட்பர்கன்ஜ் ஆகிய பகுதிகளில் கடும் பனிமூட்டம் நிலவியது.

காற்று மாசு காரணமாக பொதுமக்கள் சுவாச பிரச்சினை, சரும நோய்கள் உள்ளிட்ட பல்வேறு பாதிப்புகளுக்கு ஆளாகி வருகின்றனர். காற்று மாசை குறைக்கும் வகையில் சாலையில் நீர் தெளிக்கப்பட்டு வருகிறது. காற்று தரக் குறியீடு என்பது காற்றின் தரத்தை குறிப்பதற்கு பயன்படும் ஒரு அளவு ஆகும். இந்த குறியீடு 0 முதல் 50 வரை இருந்தால் காற்று நல்ல தரத்துடன் உள்ளது என்று பொருள். அதே போல் 51 முதல் 100 வரை இருந்தால் காற்றின் தரம் திருப்திகரமான அளவில் உள்ளது. 101 முதல் 200 வரை இருந்தால் மிதமான தரம், 201 முதல் 300 வரை இருந்தால் மோசமாக உள்ளது. 301 முதல் 400 வரை இருந்தால் மிக மோசமாக உள்ளது. 401 முதல் 500 வரை இருந்தால் கடுமையாக காற்று மாசடைந்து உள்ளது என்று அறியப்படுகிறது.

Read Entire Article