
புதுடெல்லி,
70 தொகுதிகள் கொண்ட டெல்லி சட்டசபைக்கு கடந்த 5-ந்தேதி தேர்தல் நடைபெற்றது. இதில் மொத்தம் சுமார் 61 சதவீத வாக்குகள் பதிவாகின. தேர்தலில் பா.ஜனதா வெற்றிபெறும் என தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகளில் பெரும்பாலானவை தெரிவித்தன. அதன்படி பா.ஜனதா 48 இடங்களிலும், ஆளும் கட்சியாக இருந்த ஆம் ஆத்மி 22 இடங்களிலும் வெற்றி பெற்றன. 27 ஆண்டுகளுக்குப் பிறகு டெல்லி தேர்தலில் பா.ஜனதா வெற்றி பெற்று ஆட்சி அமைக்க உள்ளது. டெல்லியின் புதிய முதல்-மந்திரியாக ரேகா குப்தா (வயது 50) இன்று பதவி ஏற்க உள்ளார். இந்தநிலையில், ராம்லீலா மைதானத்தில் தனது பதவியேற்பு விழாவிற்கு முன்னதாக, காஷ்மீரி கேட்டில் உள்ள ஸ்ரீ மார்கட் வாலே ஹனுமான் பாபா கோவிலுக்கு ரேகா குப்தா சென்று வழிபட்டார். தொடர்ந்து செய்தியாளர் சந்திப்பில் அவர் கூறியதாவது:-
டெல்லியில் பெண்களுக்கு மாதம் ரூ.2,500 வழங்கப்படும் என்ற தேர்தல் வாக்குறுதியை எனது அரசாங்கம் நிறைவேற்றும். மாதாந்திர உதவியின் முதல் தவணை மார்ச் 8 ஆம் தேதிக்குள் தகுதியான பெண்களின் வங்கி கணக்குகளில் வரவு வைக்கப்படும். வாக்குறுதிகளை நிறைவேற்றுவதே எங்களது முதன்மையான முன்னுரிமை ஆகும்.
பிரதமர் நரேந்திர மோடியின் கனவை நிறைவேற்றுவது 48 பாஜக எம்எல்ஏக்களின் பொறுப்பாகும். பெண்களுக்கு நிதி உதவி உட்பட எங்கள் அனைத்து வாக்குறுதிகளையும் நாங்கள் நிச்சயமாக நிறைவேற்றுவோம். மார்ச் 8 ஆம் தேதிக்குள் தகுதியுடைய பெண்கள் தங்கள் வங்கி கணக்குகளில் 100 சதவீதம் உதவித்தொகையை பெறுவார்கள் என்றார்.