டெல்லியில் தொடர்ந்து மோசமடைந்த காற்றின் தரம்...மக்கள் அவதி

4 months ago 20

புதுடெல்லி,

தலைநகர் டெல்லியில் குளிர்காலம் தொடங்கியது முதலே காற்று மாசு அதிகரித்து காணப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் காற்றின் தரம் இப்படித்தான் மோசமடையும்.

இந்நிலையில், டெல்லியில் கடந்த சில நாட்களாக காற்று மாசு அதிகரித்து வருகிறது. மத்திய மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தின் தரவுகளின்படி, கடந்த 24 மணி நேரத்தில் டெல்லியில் காற்று தரக் குறியீடு (AQI) 328 ஆக பதிவாகியுள்ளது. காற்றின் தரம் 'மிக மோசமான' பிரிவில் இருந்ததால், டெல்லியில் இன்று காலை புகை மூட்டமாக காணப்பட்டது.

துவாரகா, ரோகினி, டெல்லி விமான நிலையம், முண்ட்கா, நரேலா, பட்பர்கஞ்ச், ஷாதிபூர், சோனியா விஹார், வாசிர்பூர், அலிபூர், அசோக் விஹார், ஆயா நகர், புராரி, மந்திர் மார்க், ஜவஹர்லால் நேரு ஸ்டேடியம், நஜப்கர் மற்றும் நேரு நகர் ஆகிய பகுதிகளில் காற்றின் தரம் மிக மோசமான பிரிவில் பதிவாகியுள்ளது.

டெல்லியில் மோசமடைந்து வரும் காற்றின் தரத்தால் குழந்தைகள் மற்றும் வயதானவர்கள் சுவாச பிரச்சனையால் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த காற்று மாசை கட்டுப்படுத்த டெல்லி அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.

இதற்கிடையில், நகரத்தில் குறைந்தபட்ச வெப்பநிலை 20.7 டிகிரி செல்சியஸ் பதிவாகியுள்ளது, இது பருவத்தின் இயல்பை விட மூன்று புள்ளிகள் அதிகமாக உள்ளது என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் காலை 8.30 மணியளவில் ஈரப்பதம் 70 சதவீதமாக பதிவானதாக ஐஎம்டி தெரிவித்துள்ளது.

Read Entire Article