புதுடெல்லி,
டெல்லியில் ஆம் ஆத்மி ஆட்சி நடக்கிறது. இருப்பினும், அங்குள்ள சட்டம்-ஒழுங்கு விவகாரம், மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இருக்கிறது. சமீப நாட்களில் டெல்லியில் பழைய சொகுசு கார் ஷோரூம், ஓட்டல், இனிப்பு கடை ஆகியவற்றை குறிவைத்து துப்பாக்கி சூடு சம்பவங்கள் நடந்தன. பணம் பறிக்கும் நோக்கத்தில் தாதா கும்பல்கள் இச்செயல்களில் ஈடுபட்டதாக போலீசார் சந்தேகிக்கின்றனர். துப்பாக்கி சூடு சம்பவங்கள் குறித்து டெல்லி சட்டசபையில் ஆம் ஆத்மி எம்.எல்.ஏ.க்கள் பிரச்சினை எழுப்பினர். பணம் கேட்டு வர்த்தகர்களுக்கு மிரட்டல் வருவதாகவும், டெல்லி போலீசார் மெத்தனமாக இருப்பதாகவும் குற்றம் சாட்டினர்.
இந்நிலையில், இந்த பிரச்சினை குறித்து டெல்லி முன்னாள் முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் தனது 'எக்ஸ்' வலைத்தள பக்கத்தில் கூறியிருப்பதாவது:-
டெல்லியில் சட்டம்-ஒழுங்கு சீர்குலைந்து விட்டது. முற்றிலும் காட்டாட்சி நடக்கிறது. தலைநகர் மக்கள் பீதியில் உள்ளனர். டெல்லி சட்டம்-ஒழுங்கு விவகாரம், மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா கட்டுப்பாட்டில் இருக்கிறது. அவர் உடனடியாக உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.