புதுடெல்லி,
நாட்டின் தலைநகர் டெல்லிக்கு பல்வேறு நகரங்களில் இருந்தும் ரெயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில், டெல்லியின் பல இடங்களிலும் அதிகாலை முதல் பனிமூட்டம் சூழ்ந்து தெளிவற்ற வானிலை காணப்படுகிறது. இதனால், வாகன போக்குவரத்து பாதிப்படைந்து உள்ளது. ரெயில்களின் சேவையிலும் பாதிப்பு ஏற்பட்டு உள்ளது.
டெல்லிக்கு, பல்வேறு நகரங்களில் இருந்து வந்து சேர வேண்டிய 41 ரெயில்கள் இன்று காலதாமதத்துடன் இயக்கப்படுகின்றன. இதனை இந்திய ரெயில்வே நிர்வாகம் வெளியிட்ட தகவல் தெரிவிக்கின்றது. இவற்றில் புருஷோத்தம் எக்ஸ்பிரஸ், மகாபோதி எக்ஸ்பிரஸ், லிச்வி எக்ஸ்பிரஸ், தட்சிண எக்ஸ்பிரஸ், மால்வா எக்ஸ்பிரஸ், சம்பர்க் கிராந்தி எக்ஸ்பிரஸ் ஆகியன 3 மணிநேர காலதாமதத்துடன் இயக்கப்படுகின்றன.
பூர்வா எக்ஸ்பிரஸ், வைஷாலி எக்ஸ்பிரஸ், பிரயாக்ராஜ் எக்ஸ்பிரஸ், சிரஞ்சீவி எக்ஸ்பிரஸ், காசி விஸ்வநாத் எக்ஸ்பிரஸ், பத்மாவதி எக்ஸ்பிரஸ், ஜி.டி. எக்ஸ்பிரஸ் ஆகியன 2 மணிநேர காலதாமதத்துடன் இயக்கப்படுகின்றன.
இதனால், ரெயில் பயணிகள் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளனர். கடந்த சில நாட்களாகவே டெல்லியில் கடும் பனிமூட்டம் மற்றும் தெளிவற்ற வானிலை ஆகியவற்றால் ரெயில்களின் வருகையில் காலதாமதம் ஏற்பட்டு பயணிகள் தொடர்ந்து அவதியடைந்து வருகின்றனர்.