டெல்லியில் இன்று புவிசார் அரசியல் மாநாடு: பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார்

5 hours ago 3

புதுடெல்லி,

புவிசார் அரசியல் மற்றும் புவிசார் பொருளாதாரம் தொடர்பான இந்தியாவின் முதன்மை மாநாடான 'ராய்சினா பேச்சுவார்த்தை' கடந்த 9 ஆண்டுகளாக நடந்து வருகிறது.இந்த ஆண்டுக்கான மாநாடு இன்று (திங்கட்கிழமை) முதல் 3 நாட்கள் நடக்கிறது. 'காலச்சக்கரம்-மக்கள், அமைதி, கிரகம்' என்ற கருப்பொருளில் நடைபெறும் இந்த மாநாட்டை பிரதமர் மோடி இன்று தொடங்கி வைக்கிறார்.

மாநாட்டில் நியூசிலாந்து பிரதமர் கிறிஸ்டோபர் லக்சன், அமெரிக்க புலனாய்வுப்பிரிவு இயக்குனர் துளசி கப்பார்ட், உக்ரைன் வெளியுறவு மந்திரி ஆன்ட்ரி சிபிகா உள்பட ஏராளமானோர் கலந்து கொள்கிறார்கள். முக்கியமாக தைவான் நாட்டு பாதுகாப்பு அதிகாரிகள் உள்ளிட்டோர் அடங்கிய குழு ஒன்று முதல் முறையாக பங்கேற்கிறது. கடந்த சில ஆண்டுகளாக இந்தியா மற்றும் தைவான் இடையேயான உறவின் வெளிப்பாடாக இந்த பங்கேற்பு அமைந்துள்ளது.

மேலும் மந்திரிகள், முன்னாள் மற்றும் இந்நாள் அரசு தலைவர்கள், ராணுவ தளபதிகள், தொழில்துறை தலைவர்கள், தொழில்நுட்ப வல்லுனர்கள், கல்வியாளர்கள், ஊடகத்துறையினர், நிபுணர்கள் என சுமார் 125 நாடுகளின் பிரதிநிதிகள் இந்த மாநாட்டில் கலந்து கொள்கிறார்கள். மாநாட்டில் நடைபெறும் பல்வேறு பேச்சுவார்த்தைகளில் சுமார் 20 நாடுகளின் வெளியுறவு மந்திரிகள் பங்கேற்க உள்ளனர்.

அந்தவகையில் சுலோவேனியா, லக்சம்பர்க், லாத்வியா, மால்டோவா, ஜார்ஜியா, சுவீடன், பூடான், மாலத்தீவு, நார்வே உள்ளிட்ட நாடுகளின் வெளியுறவு மந்திரிகள் இந்த பேச்சுவார்த்தைகளில் முக்கிய பங்காற்றுகின்றனர். மாநாட்டு தொடக்க நிகழ்வில் நியூசிலாந்து பிரதமர் லக்சன் சிறப்புரை நிகழ்த்துகிறார். கியூபாவின் துணை பிரதமர் மார்ட்டினஸ் டையஸ், பிலிப்பைன்ஸ் வெளியுறவு மந்திரி என்ரிக் மனாலோ ஆகியோரும் மாநாட்டில் கலந்து கொள்கிறார்கள்.

10-வது ஆண்டாக நடைபெறும் இந்த மாநாட்டில் பல்வேறு அமர்வுகள் இடம்பெறுகின்றன. இதில் உலகின் தற்போதைய நிலை குறித்து பங்கேற்பாளர்கள் விவாதிப்பார்கள். மேலும் பல்வேறு சமகால விஷயங்களில் ஒத்துழைப்புக்கான வாய்ப்புகளை ஆராய்வார்கள். இந்த மாநாட்டில சுமார் 125 நாடுகளை சேர்ந்த 3,500-க்கு மேற்பட்ட பிரதிநிதிகள் பங்கேற்பார்கள் என வெளியுறவு அமைச்சக வட்டாரங்கள் தெரிவித்து உள்ளன.

Read Entire Article