சென்னை: ‘‘டெல்லி பயணம் குறித்து எடப்பாடி பழனிசாமி தேவையற்ற விமர்சனம் செய்கிறார். திமுக ஆட்சி பற்றி குறை சொல்வதற்கு எதுவும் இல்லாததால், அரைத்த மாவையே அரைத்துக் கொண்டிருக்கிறார். டெல்லிக்கு காவிக் கொடியையையும் ஏந்திச் செல்லவில்லை, வெள்ளைக்கொடியுடனும் செல்லவில்லை. எடப்பாடிக்கு பதில் கூறி என் தரத்தை தாழ்த்திக்கொள்ள விரும்பவில்லை’’ என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று கொளத்தூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில், இந்து சமய அறநிலையத் துறை சார்பில் ரூ.22.61 கோடி மதிப்பீட்டில் மூன்று மூத்த குடிமக்கள் உறைவிடங்கள் கட்டுமான பணிக்கு அடிக்கல் நாட்டி, ரூ.4.36 கோடி செலவில் மேம்படுத்தப்பட்ட ஜெனரல் குமாரமங்கலம் குளம் மற்றும் பூங்கா, ரூ.91.36 கோடி செலவில் மேம்படுத்தப்பட்ட தணிகாச்சலம் நகர் கால்வாய் ஆகியவற்றை திறந்து வைத்தார்.
மேலும், கொளத்தூர் பகுதியைச் சேர்ந்த 10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வுகளில் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள், 150 மாற்றுத்திறனாளிகளுக்கு இணைப்பு சக்கரங்கள் பொருத்தப்பட்ட ஸ்கூட்டர்கள், அனிதா அச்சீவர்ஸ் அகாடமி மாணவ, மாணவியர்களுக்கு தையல் இயந்திரங்கள் மற்றும் மடிக்கணினிகளையும், பயனாளிகளுக்கு கண்ணாடிகளையும் வழங்கினார்.பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது: தமிழக அரசு மீது எதிர்க்கட்சி தலைவர் தொடர்ந்து குற்றச்சாட்டு கூறி வருகிறாரா? திமுக ஆட்சி பற்றி குறை சொல்வதற்கு எதுவும் எடப்பாடி பழனிசாமிக்கு கிடைக்கவில்லை. எனது டெல்லி பயணம் குறித்து திரும்ப திரும்ப அரைத்த மாவையே அரைத்துக் கொண்டிருக்கிறார். எடப்பாடிக்கு பதில் கூறி என் தரத்தை தாழ்த்திக்கொள்ள விரும்பவில்லை.
டெல்லி பயணம் குறித்து விமர்சனம் வைத்துள்ளாரே எடப்பாடி? வெள்ளைக்கொடி எடுத்துக் கொண்டு செல்வதாக எடப்பாடி கூறினார். வெள்ளைக்கொடி எடுத்துக் கொண்டும் நான் போகவில்லை, காவி கொடியுடனும் போகவில்லை என்று தெளிவாக நான் ஏற்கனவே சொல்லிவிட்டேன்.மக்கள் தங்களை தாங்களை காத்துக்கொள்ள வேண்டும் என்று நேற்றுகூட எடப்பாடி கூறி உள்ளாரே? அதிமுக ஆட்சியில் இருந்தபோது கொள்ளையடித்த ஆட்சி. ஏற்கனவே சாத்தான்குளம், தூத்துக்குடி, பொள்ளாச்சி இப்படி பல சம்பவங்கள் இருக்கிறது. அதெல்லாம் எடுத்துச் சொல்ல நேரம் போதாது. இதெல்லாம் வீம்புக்காக பண்ணிக் கொண்டிருக்கிறார். அதற்கு சில மீடியாக்களும் இரையாகி, அந்த செய்திகளை திரும்ப திரும்ப போட்டுக் கொண்டிருக்கிறார்கள். இவ்வாறு அவர் கூறினார்.
The post டெல்லிக்கு காவி, வெள்ளைக்கொடி ஏந்திச் செல்லவில்லை எடப்பாடி பழனிசாமிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் மீண்டும் பதிலடி appeared first on Dinakaran.