டெல்லிக்காக கோஹ்லி ஆடுவாரா? ரஞ்சி போட்டியில் களம் இறங்கும் ரோகித்சர்மா, கில், ரிஷப் பன்ட்

3 hours ago 3

மும்பை: இந்திய கிரிக்கெட் அணி, நியூசிலாந்துக்கு எதிராக சொந்த மண்ணில் நடந்த டெஸ்ட் தொடரில் 3-0 என தோல்வி அடைந்து ஒயிட்வாஷ் ஆனது. தொடர்ந்து ஆஸ்திரேலியாவுக்கு எதிராக பார்டர்-கவாஸ்கர் டிராபியில் 3-1 என தோல்வியடைந்து டெஸ்ட் சாம்பியன் ஷிப் பைனல் வாய்ப்பை பறிகொடுத்தது. டெஸ்ட்டில் தொடர் தோல்வியால் முன்னணி வீரர்கள் அனைவரும் ரஞ்சி போட்டிகளில் ஆட வேண்டும் என பிசிசிஐ அறிவுறுத்தி உள்ளது.

ரஞ்சி போட்டிகள் வரும் 23ம் தேதி தொடங்க உள்ள நிலையில் ரோகித்சர்மா மும்பை அணிக்காக களம் இறங்க உள்ளார். மும்பை வான்கடே மைதானத்தில் நேற்று அவர் 2 மணி நேரம் பேட்டிங் பயிற்சியில் ஈடுபட்டார். கடைசியாக 2015ம் ஆண்டில் உத்தரப்பிரதேசம் அணிக்கு எதிரான ரஞ்சிக்கோப்பை தொடரில் அவர் ஆடினார். அதன் பின்னர் தற்போது தான் உள்ளூர் போட்டிகளில் களமிறங்க உள்ளார் என்பது கவனிக்கத்தக்கது.

இதேபோல் ஜெய்ஸ்வால் மும்பை அணிக்காக ஜம்மு காஷ்மீர் அணிக்கு எதிரான போட்டியில் ஆடுகிறார். சுப்மன்கில் பஞ்சாப் அணிக்காக வரும் 23ம்தேதி பெங்களூருவில் தொடங்கும் கர்நாடக அணிக்கு எதிராக களம் இறங்க உள்ளார். டெல்லி வீரர் ரிஷப் பன்ட் சவுராஷ்டிரா அணிக்கு எதிராக ராஜ்கோட்டில் நடைபெற உள்ள போட்டியில் ஆட உள்ளார். இங்கிலாந்துக்கு எதிரான டி.20தொடரில் இடம்பெறாத அனைத்து முன்னணி வீரர்களுக்கும் ரஞ்சி போட்டியில் ஆட அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஆனால் விராட் கோஹ்லி டெல்லி அணிக்காக ஆடுவாரா என்பது உறுதிபடுத்தபடவில்லை.

மனைவியை அழைத்து செல்ல தடை
தொடர் தோல்விகள் காரணமாக வீரர்களுக்கு பிசிசிஐ கடும் கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. அதன்படி இனி எந்த ஒரு கிரிக்கெட் வீரர்களின் மனைவியும் தொடர் முழுவதும் வெளிநாட்டில் தங்கிக் கொள்ள அனுமதி அளிக்கப்படாது என்று பிசிசிஐ தெரிவித்திருக்கிறது. அது மட்டும் அல்லாமல் இந்திய அணி 45 நாட்களுக்கு மேல் ஒரு தொடரில் வெளிநாட்டில் பங்கேற்கிறது என்றால் கிரிக்கெட் வீரர்களின் குடும்பத்தினர் வெறும் 2 வாரங்கள் மட்டுமே தங்க அனுமதி அளிக்கப்படும் என பிசிசிஐ கூறி இருக்கிறது.

இதேபோன்று அனைத்து வீரர்களும் இனி அணியின் பேருந்தில் மட்டும்தான் செல்ல வேண்டும் என்றும், நாங்கள் தனியாக காரில் வருகிறோம். குடும்பத்தினருடன் வேறு வாகனத்தில் வருகிறோம் என்று சொல்லக்கூடாது என பிசிசிஐ நெறிமுறைகளை வெளியிட்டு இருக்கிறது. திருமணம் ஆகாத வீரர்கள் கேர்ள் பிரண்டையும் அழைத்து வர கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.

* ரோகித் சர்மா பாகிஸ்தான் செல்ல அனுமதியா?
8 அணிகள் பங்கேற்கும் சாம்பியன் டிராபி தொடர் வரும் பிப்.19ம் தேதி முதல் மார்ச் 9ம் தேதிவரை பாகிஸ்தானில் நடைபெற உள்ளது. ஆனால் பாதுகாப்பு அச்சுறுத்தல் காரணமாக இந்தியா அங்கு செல்ல மறுத்ததால் இந்திய அணியின் போட்டிகள்மட்டும் துபாயில் நடைபெற உள்ளது.

சாம்பியன் டிராபி தொடருக்கு முன் கோப்பை அறிமுகம் மற்றும் கேப்டன்கள் செய்தியாளர்கள் சந்திப்பு நடைபெறும். இந்த நிகழ்விற்காக இந்திய கேப்டன் ரோகித்சர்மா, பாகிஸ்தானுக்கு செல்வாரா என்பதை பிசிசிஐ இன்னும் உறுதிப்படுத்தவில்லை. பிசிசிஐயின் அனுமதி அளிக்கமறுத்தால், ஐசிசி போட்டி வரலாற்றில் கேப்டன்கள் சந்திப்பைத் தவிர்க்கும் ஒரே நாடு இந்தியாதான் என்ற நிலை உருவாகும்.

* ரஞ்சி கிரிக்கெட் தமிழக அணி அறிவிப்பு
சென்னை: இந்தியாவில் நடைபெறும் முக்கிய உள்ளூர் கிரிக்கெட் தொடரான ரஞ்சி கோப்பையின் 2ம் கட்ட போட்டிகளில் வரும் 23ம் தேதி தொடங்குகிறது. இதில் டி பிரிவில் இடம் பெற்றுள்ள தமிழக அணி முதல் போட்டியில் சண்டிகருக்கு எதிராக மோத உள்ளது. இந்த போட்டி சேலத்தில் நடைறெ உள்ளது.

இதற்காக சாய் கிஷோர் தலைமையிலான தமிழக அணி அறிவிக்கப்பட்டது. அணி விபரம்: சாய் கிஷோர் (கே), ஆர்.ஜெகதீசன், விஜய் சங்கர், இந்திரஜித், முகமது அலி, ஆண்ட்ரே சித்தார்த், பிரதோஷ் ரஞ்சன் பால், பூபதி வைஷ்ண குமார், அஜித் ராம், லக்ஷய் ஜெயின் , லோகேஷ்வர், சந்தீப் வாரியர், முகமது, சித்தார்த், திரிலோக் நாக்.

The post டெல்லிக்காக கோஹ்லி ஆடுவாரா? ரஞ்சி போட்டியில் களம் இறங்கும் ரோகித்சர்மா, கில், ரிஷப் பன்ட் appeared first on Dinakaran.

Read Entire Article