டெல்லி முதல்வர் தேர்வு தள்ளிப்போகிறது: மோடியின் வெளிநாட்டு பயணத்துக்கு பின் முடிவு செய்ய பாஜ திட்டம்

1 month ago 7

புதுடெல்லி: டெல்லி சட்டபேரவை தேர்தலில் பாஜ வெற்றி பெற்று உள்ள நிலையில் முதல்வர் பதவிக்கு பர்வேஷ் வர்மா,விஜேந்தர் குப்தா உள்ளிட்ட 5 தலைவர்களின் பெயர்கள் அடிபடுகிறது. டெல்லி சட்டப்பேரவை தேர்தல் கடந்த 5ம் தேதி நடைபெற்றது. ஆளும் ஆம் ஆத்மி, பாஜ, காங்கிரஸ் கட்சிகள் இடையே மும்முனை போட்டி நிலவியது. பேரவை தேர்தலில் பதிவான வாக்குகள் நேற்று முன்தினம் வெளியாகியது. இதில்பெரும்பான்மைக்கு 36 இடங்கள் தேவை என்ற நிலையில், பாஜ 48 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்றியது. கடந்த 1993ம் ஆண்டு முதல் 1998ம் ஆண்டு வரை டெல்லியில் பாஜ ஆட்சி நடந்தது.இப்போது 26 ஆண்டு இடைவெளிக்கு பிறகு அங்கு பாஜ மீண்டும் ஆட்சியை கைப்பற்றியுள்ளது.

2020ம் ஆண்டு தேர்தலில் 62 இடங்களில் வெற்றி பெற்ற ஆம் ஆத்மிக்கு தற்போது 22 இடங்கள் மட்டுமே கிடைத்துள்ளன. புதுடெல்லி தொகுதியில் போட்டியிட்ட முன்னாள் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் 4,089 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியுற்றார். பாஜ வெற்றி பெற்று ஆட்சி அமைக்க உள்ள நிலையில், டெல்லி யார் முதல்வர் என்ற எதிர்பார்ப்பு தீவிரமடைந்துள்ளது.நேற்று முன்தினம் கட்சியின் தலைமை அலுவலகத்தில் தொண்டர்கள் மத்தியில் பிரதமர் மோடி பேசினார். அப்போது பிரதமர் மோடியும் கட்சியின் தலைவர்களும் புதிய முதல்வர் நியமனம் குறித்து ஆலோசனை நடத்தினர். கட்சியின் தேசிய தலைவர் ஜே.பி.நட்டா நேற்று ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்து இது குறித்து விவாதித்தார்.

முதல்வர் பதவிக்கான பட்டியலில் பல்வேறு நபர்களின் பெயர்கள் பரிசீலனையில் இருப்பதாக கூறப்படுகிறது. அதன்படி, பர்வேஷ் வர்மா, அஷிஷ் சூட், கட்சியின் பொது செயலாளர் பவன் சர்மா,முன்னாள் டெல்லி மாநில தலைவர்கள் விஜேந்தர் குப்தா,சதிஷ் உபாத்யாய ஆகியோரின் பெயர்கள் முன்னிலையில் உள்ளன. கடந்த தேர்தல்களில் மத்திய பிரதேசம்,ராஜஸ்தான்,ஒடிசா ஆகிய மாநிலங்களில் நடந்த தேர்தல்களில் பாஜ வெற்றி பெற்றது. அப்போது முதல்வர் பதவிக்கு கட்சியின் மூத்த தலைவர்களின் பெயர்கள் அடிபட்டன. ஆனால் கட்சி மேலிடம் யாரும் எதிர்பார்க்காத வகையில் மபியில் மோகன் யாதவ், ராஜஸ்தானில் பஜன்லால் சர்மா,ஒடிசாவில் மோகன் சரண் மாஜி ஆகியோரை நியமித்தது. அந்த பாணியில் அவ்வளவு பிரபலமாகாத ஒருவரை டெல்லி முதல்வராக நியமித்து ஆச்சரியத்தை நிகழ்த்தலாம் என கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.

இது பற்றி டெல்லி பாஜ தலைவர் வீரேந்திர சச்சதேவா,‘‘முதல்வராக யாரை தேர்வு செய்வது என்பது பற்றி கட்சி மேலிடம் முடிவு செய்யும். தங்களுக்கு ஒதுக்கப்பட்ட பணியை சிறப்பாக செய்து முடிப்பதற்கான திறமை எம்எல்ஏக்களிடம் உள்ளது’’ என்றார். பிரதமர் மோடி இன்று முதல் 4 நாட்களுக்கு பிரான்ஸ், அமெரிக்க நாடுகளுக்கு சுற்றுபயணம் செல்கிறார். அவர் வெளிநாட்டு பயணத்தை முடித்து விட்டு இந்தியா வந்த பிறகு தான் டெல்லி முதல்வர் யார் என்பது அறிவிக்கப்படும் என்று பாஜ தலைவர்கள் தெரிவித்தனர். இதற்கிடையே, தேர்தல் தோல்வியை அடுத்து முதல்வர் அடிசி நேற்று ஆளுநர் வி.கே.சக்சேனாவை சந்தித்து ராஜினாமா கடிதத்தை கொடுத்தார். ஆனால் புதிய அரசு அமையும் வரை பதவியில் தொடருமாறு அவரை ஆளுநர் கேட்டு கொண்டதாக ராஜ்பவன் வட்டாரங்கள் தெரிவித்தன.

67 இடங்களில் காங். டெபாசிட் இழப்பு
தேர்தலில் சுயேச்சையாக போட்டியிட்ட வேட்பாளர்கள் உட்பட 80 சதவீதத்தினர் தங்கள் டெபாசிட்டை இழந்தனர். ஆம் ஆத்மி,பாஜ மற்றும் அதன் கூட்டணி கட்சிகளின் வேட்பாளர்கள் தங்கள் டெபாசிட்டை தக்க வைத்தனர். காங்கிரசில் போட்டியிட்ட 67 பேர் டெபாசிட் இழந்தனர்.3 பேர் மட்டுமே டெபாசிட்டை தக்க வைத்துள்ளனர்.

The post டெல்லி முதல்வர் தேர்வு தள்ளிப்போகிறது: மோடியின் வெளிநாட்டு பயணத்துக்கு பின் முடிவு செய்ய பாஜ திட்டம் appeared first on Dinakaran.

Read Entire Article