டெல்லி மார்க்கெட்டில் பிரான்ஸ் நாட்டு தூதரின் மொபைல் போன் திருட்டு - 4 பேர் கைது

2 weeks ago 5

புதுடெல்லி,

தலைநகர் டெல்லியில் உள்ள செங்கோட்டைக்கு எதிரே சாந்தினி சவுக் மார்க்கெட் அமைந்துள்ளது. குறுகலான தெருக்களைக் கொண்ட இந்த மார்க்கெட்டில் வீட்டு உபயோக பொருட்கள் முதல் மசாலா பொருட்கள், வெள்ளி பாத்திரங்கள் மற்றும் ஆபரணங்கள் வரை அனைத்து வகையான பொருட்களும் விற்பனை செய்யப்படுகின்றன.

டெல்லியின் மிகவும் பரபரப்பான, மக்கள் கூட்டம் நிறைந்த பகுதியாக விளங்கும் சாந்தினி சவுக் மார்க்கெட்டிற்கு சுற்றுலா பயணிகள் அதிக அளவில் வருகை தருகின்றனர். அதே சமயம், இங்கு திருட்டு, பிக்பாக்கெட் சம்பவங்களும் அதிக அளவில் அரங்கேறுகின்றன.

இந்த நிலையில், சாந்தினி சவுக் மார்க்கெட்டிற்கு பிரான்ஸ் நாட்டின் தூதர் தியெரி மாத்தோ, கடந்த 20-ந்தேதி தனது மனைவியுடன் வருகை தந்திருந்தார். அப்போது அவரது பாக்கெட்டில் இருந்த மொபைல் போன் திருடப்பட்டுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக பிரான்ஸ் தூதரகத்தில் இருந்து 21-ந்தேதி பெறப்பட்ட புகாரின் அடிப்படையில் டெல்லி போலீசார் விசாரணையை தொடங்கினர்.

மார்க்கெட் பகுதியில் உள்ள சி.சி.டி.வி. கேமராக்களை ஆய்வு செய்த போலீசார், பிரான்ஸ் தூதரின் மொபைல் போனை திருடியது தொடர்பாக 4 நபர்களை கைது செய்தனர். கைது செய்யப்பட்ட நால்வரும் 20 முதல் 25 வயது வரை உள்ளவர்கள் எனவும், அவர்கள் டிரான்ஸ்-யமுனா பகுதியைச் சேர்ந்தவர்கள் எனவும் போலீசார் தெரிவித்துள்ளனர். அவர்களிடம் இருந்து திருடப்பட்ட மொபைல் போன் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. தொடர்ந்து இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

Read Entire Article