பாட்னா: “டெல்லி சட்டப்பேரவை தேர்தல் முடிவுகள் பீகார் தேர்தலில் தாக்கத்தை ஏற்படுத்தாது” என ராஷ்ட்ரிய ஜனதா தளம் தெரிவித்துள்ளது. டெல்லியில் 10 ஆண்டுகள் ஆட்சியில் இருந்த ஆம் ஆத்மியை வீழ்த்தி பாஜ ஆட்சியை கைப்பற்றி உள்ளது. கெஜ்ரிவால் மீதான மதுபான கொள்கை ஊழல் குற்றச்சாட்டு உள்ளிட் மக்களின் அதிருப்தியே ஆம் ஆத்மி தோல்விக்கு காரணம் என கூறப்படுகிறது.
இந்தாண்டு இறுதியில் பீகாரில் பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. இங்கு தற்போது நிதிஷ் குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதா தள கூட்டணி ஆட்சி நடந்து வருகிறது. டெல்லி பேரவை தேர்தல் முடிவுகள் பீகார் தேர்தலில் எதிரொலிக்கும் என கணிப்புகள் வௌியாகி வருகின்றன. இதற்கு ராஷ்ட்ரிய ஜனதா தளம் மறுப்பு தெரிவித்துள்ளது.
இதுகுறித்து பீகார் முன்னாள் துணை முதல்வரும், பேரவை எதிர்க்கட்சி தலைவரும், ராஷ்ட்ரிய ஜனதா தள தலைவருமான தேஜஸ்வி யாதவ் நேற்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது டெல்லியில் பாஜ வெற்றி குறித்த கேள்விக்கு பதிலளித்த தேஜஸ்வி யாதவ், “ஜனநாயகத்தில் மக்கள்தான் உச்சபட்ச அதிகாரம் கொண்டவர்கள் என்பதை டெல்லி தேர்தல் முடிவு காட்டி உள்ளது. 26 ஆண்டுகளுக்கு பிறகு பாஜ ஆட்சியை பிடித்துள்ளது. பிரசாரத்தில் பாஜ மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகள் வெறும் வெற்று வாக்குறுதிகளாக இல்லாமல், அவற்றை நிறைவேற்றும் என நம்புவோம்” என்றார்.
தொடர்ந்து டெல்லி தேர்தல் முடிவுகள் பீகார் பேரவை தேர்தலில் எதிரொலிக்குமா என்ற கேள்விக்கு பதிலளித்த தேஜஸ்வி யாதவ், “இது பீகார். டெல்லி வேறு, பீகார் வேறு என்பதை புரிந்து கொள்ள வேண்டும். டெல்லி தேர்தல் முடிவுகள் பீகாரில் தாக்கத்தை ஏற்படுத்தாது. பீகாரில் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு ஐக்கிய ஜனதா தள தலைவர் நிதிஷ் குமார் தலைமை வகிக்கிறார். அவர் கடந்த 2005 முதல் பீகார் முதல்வராக இருக்கிறார். சிறிதுகாலம் மட்டும்தான் ஜித்தன் ராம் மாஞ்சியிடம் ஆட்சி இருந்தது” என கூறினார்.
The post டெல்லி தேர்தல் முடிவுகள் பீகாரில் தாக்கத்தை ஏற்படுத்தாது: ஆர்ஜேடி கருத்து appeared first on Dinakaran.