![](https://media.dailythanthi.com/h-upload/2025/01/27/36042361-sanjaysingh.webp)
புதுடெல்லி,
70 உறுப்பினர்களை கொண்ட டெல்லி சட்டசபைக்கான தேர்தல் பிப்ரவரி 5-ந்தேதி நடைபெற உள்ளது. பிப்ரவரி 8-ந்தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற்று முடிவுகள் அறிவிக்கப்படும். இந்த தேர்தலில், ஆளும் ஆம் ஆத்மி. காங்கிரஸ் மற்றும் பா.ஜ.க. என 3 முக்கிய கட்சிகள் மும்முனை போட்டியை ஏற்படுத்தி உள்ளன. தேர்தல் நடைபெற இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், பல்வேறு கட்சியினர் டெல்லியில் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர். மூன்றாவது முறையாக ஆட்சியை பிடிக்க ஆம் ஆத்மி கட்சி தீவிரம் காட்டி வருகிறது.
இந்நிலையில், டெல்லி தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி 60க்கும் மேற்பட்ட இடங்களை கைப்பற்றும் என்று அக்கட்சியின் எம்.பி. சஞ்சய் சிங் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது, பிரதமர் மோடி, பாஜக ஆளும் அனைத்து மாநில முதல்-மந்திரிகள் டெல்லியில் வந்து பிரசாரம் மேற்கொள்கின்றனர், ஆனால் தேர்தலில் அரவிந்த் கெஜ்ரிவால் தான் வெற்றி பெறுவார். நாங்கள் 60 இடங்களுக்கு மேல் வெற்றி பெற்று டெல்லியில் அரசாங்கத்தை அமைப்போம். தேர்தலில் வெற்றி பெறுவோம் என்று நாங்கள் நம்பிக்கையுடன் இருக்கிறோம். ஆனால் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் மோசடி செய்யப்படலாம் என்ற அச்சம் உள்ளது. அதனால், தேர்தல் நாளன்று ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் இருக்கும் இளைஞர்களைக் கொண்ட ஒரு குழுவை ஆம் ஆத்மி கட்சி தயார் செய்துள்ளது, மேலும் இந்த குழு வாக்குச்சாவடியில் உள்ள மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தில் எந்தப் பிரச்சினையும் இல்லை என்பதை உறுதி செய்யும். இவ்வாறு அவர் கூறினார்.