
சென்னை,
மத்திய இணை மந்திரி எல்.முருகன் தனது எக்ஸ் வலைதளத்தில் கூறியிருப்பதாவது:-
தமிழ்த் திரைப்படத் துறையின் புகழ்பெற்ற குணச்சித்திர நடிகரான டெல்லி கணேஷ், உடல்நலக் குறைவால் காலமானார் என்ற செய்தி மிகுந்த மனவருத்தமளிக்கிறது.
தனது சிறந்த நடிப்பிற்காக, 'கலைமாமணி விருது' மற்றும் சிறந்த நடிகருக்கான விருது போன்ற விருதுகளை வென்றவர், 400-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்து மக்கள் மனதில் நீங்காத இடம் பிடித்துள்ளார். தமிழ்ச் சினிமாவில் நடிக்கத் துவங்கும் முன்பு, இந்திய விமானப் படையிலும் பணியாற்றி நாட்டிற்கு சேவையாற்றியுள்ளார்.
இந்தச் சமயத்தில், அவரது குடும்பத்தாருக்கு எனது ஆறுதலும், இரங்கலும் தெரிவித்துக் கொள்வதோடு, அண்ணாரது ஆன்மா சாந்தியடைய கடவுளிடம் வேண்டிக் கொள்கிறேன்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.