நாகை: டெல்டாவில் மழை காரணமாக 3,500 ஏக்கர் சம்பா பயிர்கள் மழை நீரில் மூழ்கி உள்ளது.
தென்தமிழகம் மற்றும் அதனை ஒட்டிய குமரிக்கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதனால் தமிழகத்தில் கடலோர மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. டெல்டா மாவட்டங்களிலும் மழை பெய்து வருகிறது.
நாகை, திருவாரூர் மற்றும் காரைக்கால் மாவட்டங்களில் இன்று அதிகாலை முதல் கன மழை பெய்து வருகிறது. தஞ்சை மாவட்டத்தில் அதிகாலை 3 மணி முதல் பரவலாக மழை பெய்து வருகிறது. புதுக்கோட்டை நகரில் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. அதே சமயம் கடற்கரை பகுதியான மணமேல்குடி, அறந்தாங்கி, கோட்டைப்பட்டினம், ஜெகதாபட்டினம், மீமிசல், நாகுடி, கட்டுமாவடி உள்ளிட்ட பகுதிகளில் அதிகாலை முதல் மழை பெய்கிறது. திருச்சியில் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. பெரம்பலூர், அரியலூர், கரூர் மாவட்டங்களில் மழை இல்லை.
மழை காரணமாக தஞ்சை மாவட்டம் திருவோணம், ஊரணிபுரம், பாப்பாநாடு, புலவன்காடு, வடசேரி, திருமங்கலகோட்டை, கீழையூர், ஒக்கநாடு கீழையூர் உள்பட பல்வேறு கிராமங்களில் நடவு செய்து 30 நாட்களே ஆன சுமார் 1000 ஏக்கர் சம்பா இளம்பயிர்கள் மழைநீரில் மூழ்கி உள்ளன. அதேபோல் வேதாரண்யம் பகுதியில் 2500 ஏக்கர் சம்பா பயிர்கள் மழைநீரில் மூழ்கியுள்ளது.
அரசலாற்றில் இறங்க தடை: நாகை அருகே திருமருகல் அடுத்த அம்பல் பகுதி அரசலாற்றில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. 10 கிலோ மீட்டர் தூரத்திற்கு ஆகாயத்தாமரை மண்டி கிடப்பதால் வெள்ள நீர் ஊருக்குள் புகுந்து விடாமல் இருக்க நீர்வளத்துறை அதிகாரிகள், ஊழியர்கள் ஆகாய தாமரையை அகற்றும் பணியில் ஈடுபட்டுள்ளனர். ஆற்றில் பொதுமக்கள் இறங்க வேண்டாம் என காவிரி வடிநில கோட்ட அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
மீனவர்கள் முடக்கம்: வங்கடலில் வரும் 27 மற்றும் 28 ஆகிய தேதிகளில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாக வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதனால் நாகை மாவட்டத்தில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. இதன் காரணமாக விசைப்படகுகள் மற்றும் பைபர் படகுகள் மறு அறிவிப்பு வரும் வரை மீன்பிடிக்க ஆழ்கடல் செல்ல வேண்டாம் என மீன்வளத்துறை உதவி இயக்குனர் ஜெயராஜ் உத்தரவு பிறப்பித்துள்ளார். நேற்று முதல் விசைப்படகு மீனவர்களுக்கு டோக்கன் விநியோகம் நிறுத்தப்பட்டுள்ளது. ஏற்கனவே ஆழ்கடல் சென்ற அனைத்து படகுகளும் வரும் 23ம் தேதிக்குள் கரை திரும்ப வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் மீனவர்கள் கரை திரும்பி வருகின்றனர். மாவட்டத்தில் 600 விசைப்படகுகள், 3 ஆயிரம் பைபர் படகுகள் உள்ளது. 1 லட்சம் மீனவர்கள் மீன்சார்ந்த தொழிலில் ஈடுபட்டுள்ளனர். இன்று பெரும்பாலான மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை. தஞ்சை மீனவர்கள் தொடர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால் கடலுக்கு செல்லவில்லை. புதுக்கோட்டை மீனவர்களும் கடலுக்கு செல்லவில்லை.
வேதாரண்யம் காந்தி நகர் பகுதியில் 200 வீடுகளை மழை நீர் சூழ்ந்துள்ளது. இங்கு தார்சாலையில் 2 அடி உயரத்துக்கு மழை நீர் தேங்கி உள்ளதால் மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். இன்று ஜேசிபி மூலம் வாய்க்கால் தூர்வாரப்பட்டு நீரை வடியவைக்கும் பணி நடந்து வருகிறது. இன்று காலை 8 மணி வரை வேதாரண்யத்தில் 100 மி.மீ, கோடியக்கரையில் 90 மிமீ மழை பதிவாகி உள்ளது.
கோடியக்கரையில் அதிகம்
கடந்த 24 மணி நேரத்தில் இன்று காலை 8 மணி வரை பெய்த மழை(மி.மீ) அளவு: நாகை 24.7, திருப்பூண்டி 134.5, வேளாங்கண்ணி 80.8, திருக்குவளை 109.3, தலைஞாயிறு 85, வேதாரண்யம் 98, கோடியக்கரை 149.
The post டெல்டாவில் மழை நீடிப்பு; 3,500 ஏக்கர் சம்பா மூழ்கியது: மீனவர்கள் முடக்கம் appeared first on Dinakaran.