சென்னை: டென்மார்க்கில் நடைபெறும் அடுத்த தலைமுறை டிஜிட்டல் செயல் திட்டம் 2024-ல் இந்தியாவின் பிரதிநிதியாகச் செல்லும் நிறுவனர் அழகு பாண்டிய ராஜாவை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பாராட்டினார். முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் இன்று தலைமைச் செயலகத்தில், உலகளாவிய அங்கீகாரத்தைப் பெறுவதற்காக டென்மார்க்கின் கோபன்ஹேகனில் நடைபெறும் “அடுத்த தலைமுறை டிஜிட்டல் செயல் திட்டம் 2024”-ல் இந்தியாவின் பிரதிநிதியாகச் செல்லும் தமிழ்நாட்டைச் சேர்ந்த வளர்ந்து வரும் தொழில்நுட்ப புத்தொழில் நிறுவனமான ஸ்கிராப்பிஃபை எக்கோடெக் (Scrapify Ecotech) பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் நிறுவனர் ம.பி.அழகு பாண்டிய ராஜா அவர்களை பாராட்டினார்.
தமிழ்நாடு தொழில்நுட்ப மையத்தினால் (iTNT Hub) ஆதரவளிக்கப்பட்டுவரும் இந்த புத்தொழில் நிறுவனம், 2,000 விண்ணப்பங்களில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட உலகளாவிய 18 நிறுவனங்களில், இந்தியாவிலிருந்து தெரிவு செய்யப்பட்ட இரண்டு நிறுவனங்களில் தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒரு நிறுவனம் இது என்பது குறிப்பிடத்தக்கது. அதனைத் தொடர்ந்து, ஸ்கிராப்பிஃபை எக்கோடெக் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் நிறுவனர் அழகு பாண்டிய ராஜா அவர்கள், தங்கள் நிறுவனத்தால் வடிவமைக்கப்பட்ட எக்கோஃபுளோட்டர் (Eco-Floater) என்னும் நீர்நிலைகளைத் தூய்மை செய்யும் ஒரு புதுமையான நீர் ட்ரோன் இயந்திரம் செயலாற்றும் விதத்தை முதலமைச்சர் அவர்களிடம் எடுத்துரைத்தார்.
எக்கோஃபுளோட்டர் மேம்பட்ட தொழில்நுட்ப உதவியுடன் எண்ணெய் கசிவுகளை திறம்பட சுத்தப்படுத்துதல், நெகிழி, ஆகாய தாமரை மற்றும் பிற மாசுகளை நீக்குதல் ஆகியவற்றுடன் நிகழ்நேர நீரின் தரத்தை கண்காணித்து, நீர்நிலை பராமரிப்பில் முக்கிய பங்காற்றுகிறது. அக்டோபர் 28 முதல் நவம்பர் 2, 2024 வரை டென்மார்க்கின் கோபன்ஹேகனில் நடைபெறும் டிஜிட்டல் தொழில்நுட்ப உச்சி மாநாடு 2024-ன் உலகளாவிய இளைஞர் முயற்சியின் ஒரு பகுதியான “அடுத்த தலைமுறை டிஜிட்டல் நடவடிக்கை” நிகழ்ச்சியில் எக்கோஃபுளோட்டர் செயல்பாடுகள் குறித்து விளக்கப்படும்.
தமிழ்நாடு அரசின் தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறையின் கீழ் செயல்பட்டு வரும் தமிழ்நாடு தொழில்நுட்ப மையம், ஸ்கிராப்பிஃபை எக்கோடெக் நிறுவனத்திற்கு, தயாரிப்பு மேம்பாட்டு ஆதரவு, ஆய்வக ஆதரவு, தொழில்நுட்ப வழிகாட்டல், மென்பொருள் தயாரிப்பு மேம்பாடு மற்றும் வணிகத்திற்கான வழிகாட்டுதல் மற்றும் முதலீட்டாளர் இணைப்பு போன்றவற்றில் ஆதரித்துள்ளது.
ஸ்கிராப்பிஃபை எக்கோடெக் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் நிறுவனர் அழகு பாண்டிய ராஜா அவர்கள், தமிழ்நாடு அரசு அளித்த அங்கீகாரமும் ஊக்கமும் நாங்கள் உயர்ந்த நிலைக்கு வருவதற்கான மன உறுதியை அளித்துள்ளது என்றும், எங்களுக்கு தொடர்ந்து ஆதரவை வழங்கியதற்காக அரசிற்கும், தமிழ்நாடு தொழில்நுட்ப மையத்திற்கும் நன்றியை தெரிவித்துக் கொண்டார்.
இந்த நிகழ்வின்போது, தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர் முனைவர் பழனிவேல் தியாகராஜன், தலைமைச் செயலாளர் நா.முருகானந்தம், இ.ஆ.ப., தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறையின் கூடுதல் தலைமைச் செயலாளர் குமார் ஜெயந்த், இ.ஆ.ப., தமிழ்நாடு தொழில்நுட்ப மையத்தின் தலைமை செயல் அலுவலர் வனிதா வேணுகோபால் ஆகியோர் உடனிருந்தனர்.
The post டென்மார்க்கில் நடைபெறும் டிஜிட்டல் செயல் திட்டம் 2024-ல் பங்கேற்க இந்தியாவின் பிரதிநிதியாகச் செல்லும் அழகு பாண்டிய ராஜாவை பாராட்டினார் முதல்வர் மு.க.ஸ்டாலின்!! appeared first on Dinakaran.