
ஜெனீவா,
இஸ்ரேல், ஹமாஸ் இடையிலான போர் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. இதனிடையே, போர் நிறுத்த ஒப்பந்த அடிப்படையில் ஹமாஸ் அமைப்பினர் தங்கள் வசம் உள்ள இஸ்ரேலிய பணய கைதிகளை விடுதலை செய்ய ஒப்புக்கொண்டனர். அதற்கு ஈடாக இஸ்ரேல் தங்கள் நாட்டு சிறைகளில் உள்ள பாலஸ்தீனிய கைதிகளை விடுதலை செய்ய ஒப்புக்கொண்டுள்ளது.
6 வார போர் நிறுத்தம் அமலில் உள்ள நிலையில் இதுவரை இஸ்ரேலிய பணய கைதிகளில் 21 பேரை ஹமாஸ் விடுதலை செய்துள்ளது. அதற்கு ஈடாக இதுவரை பாலஸ்தீனியர்கள் 730 பேரை இஸ்ரேல் விடுதலை செய்துள்ளது. காசாவில் இன்னும் 76 இஸ்ரேலியர்கள் பணய கைதிகளாக உள்ளதாகவும், இதில் 36 பேர் உயிரிழந்திருக்கலாம் எனவும் இஸ்ரேல் தெரிவித்துள்ளது.
அதேவேளை, சனிக்கிழமை அனைத்து பணய கைதிகளையும் ஹமாஸ் விடுதலை செய்யவில்லை என்றால் காசாவில் நரகம் வெடிக்கும் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார். இந்நிலையில், காசாவில் மீண்டும் ஒரு பெரிய சோகத்திற்கு வழிவகுக்கும் விரோதப் போக்கை நாம் தவிர்க்க வேண்டும் என்று ஐ.நா. பொதுச்செயலாளர் அண்டோனியோ குட்டாரெஸ் தெரிவித்துள்ளார்.
மேலும், ஹமாஸ் அமைப்பினர் அடுத்த சனிக்கிழமை பணயக்கைதிகளை விடுவிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ள அவர், இரு தரப்பினரும் போர்நிறுத்த ஒப்பந்தத்தில் தங்கள் உறுதிமொழிகளை முழுமையாக கடைபிடிக்க வேண்டும் என்றும், பேச்சுவார்த்தைகளை மீண்டும் தொடங்க வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.