சென்னை: தமிழ்நாடு மாநில சைபர் கட்டுப்பாட்டு மையம், இணைய வழி குற்றப்பிரிவு தலைமையகத்தில் இருந்து, கர்நாடகாவைச் சேர்ந்த டிஜிட்டல் கைது மோசடியின் பிடியிலிருந்த ஒரு முதியவரை வெற்றிகரமாக அடையாளம் கண்டு பின்தொடர்ந்து மோசடியாளர்களிடமிருந்து அவரை மீட்டுள்ளது. மாநிலத்தின் சைபர் கிரைம் விசாரணை மையத்தில் பதிவு செய்யப்பட்ட வழக்கு தொடர்பான விசாரணையின் போது, தரவுகளின் பகுப்பாய்வு மற்றும் குழுவின் உளவுத்துறை செயல்பாடு ஆகியவை கர்நாடகாவில் வசிப்பவரை அடையாளம் காண வழிவகுத்தது.
பாதிக்கப்பட்டவர் டிஜிட்டல் கைது மோசடியில் சிக்கியிருக்கக் கூடும் எனத் தெரியவந்தது. அவரை டிஜிட்டல் கைது தந்திரோபாயங்களைப் பயன்படுத்தி, பொய்யான காரணங்களைக் கூறி பெரிய தொகைகளை மாற்றும்படி கட்டாயப்படுத்தியது யூகிக்கப்பட்டது.டிஜிட்டல் கைதுடன் தொடர்புடைய மோசடி கும்பல் என்று சந்தேகிக்கப்படும் வங்கிக் கணக்குகளை விரிவான ஆய்வு செய்யும்போது, பிற மாநிலங்கள் மற்றும் தமிழ்நாட்டிலிருந்து வந்த புகார்களுடன் தொடர்புகள் உட்பட அதிக மதிப்புள்ள பல பரிவர்த்தனைகளை இந்த சிறப்புக் குழு கண்டுபிடித்தது.
இது திட்டமிட்ட மோசடியை வெளிக்காட்டுகிறது. இந்த பரிவர்த்தனைகளில் ஒன்று முன்பு மகாராஷ்டிராவில் நடந்த ஒரு வழக்குடன் தொடர்புடையது, மற்றொன்று கர்நாடகாவில் அதிக செல்வ பின்புலம் கொண்ட ஒரு நபரின் வங்கிக் கணக்கோடு சம்பந்தப்பட்டிருந்தது. அவர் மோசடியாளர்களின் டிஜிட்டல் கைது பொய்யை நம்பியதால் இன்னும் புகார் எதுவும் அளிக்கவில்லை. இதன்மூலம் அவர் இன்னும் மோசடியாளர்களின் பிடியில் தான் இருக்கிறார் என்பது தெரிய வந்தது.இதனை அடுத்து தமிழ்நாட்டின் இணைய வழி குற்றப்பிரிவானது விரைந்து செயல்பட்டு, கர்நாடகாவின் காவல்துறையில் உள்ள சைபர் பிரிவுக்கு பாதிக்கப்பட்டவரின் விவரங்களுடன் எச்சரித்தது. மேலும் கர்நாடக காவல்துறை உடனடியாக செயல்பட்டு பாதிக்கப்பட்டவரைக் கண்டுபிடித்து மீட்டெடுத்தது.
பொதுமக்களுக்கு சைபர் கிரைம் பிரிவு தரும் அறிவுரைகள்:
* காவல்துறை அல்லது அரசு நிறுவனத்தைச் சேர்ந்தவர்கள் என்று கூறி யாராவது அழைத்தால் பீதி அடைய வேண்டாம். அழைப்பவரின் அடையாளத்தைச் சரிபார்க்கவும்.
* பணத்தை ஒருபோதும் மாற்றவோ அல்லது தெரியாத அழைப்பாளர்களுடன் முக்கியமான தகவல்களை (OTP, கடவுச்சொற்கள், வங்கி விவரங்கள், ஆதார், PAN) பகிரவோ வேண்டாம்.
* உங்கள் வங்கிக் கணக்கு, ATM அட்டை அல்லது மொபைல் சிம்மை யாருக்கும் கடன் கொடுக்க வேண்டாம்
* சந்தேகத்திற்கிடமான இணைப்புகளைக் கிளிக் செய்வதையோ அல்லது சரிபார்க்கப்படாத வலைத்தளங்களில், குறிப்பாக வேலைகள் அல்லது லாபத்தை உறுதியளிக்கும் வலைத்தளங்களில் பதிவு செய்வதையோ தவிர்க்கவும்.
* வலுவான மற்றும் தனித்துவமான கடவுச்சொற்களைப் பயன்படுத்தவும், அவற்றைத் தொடர்ந்து புதுப்பிக்கவும்.
The post டிஜிட்டல் கைது மோசடியின் பிடியிலிருந்த முதியவரை காப்பாற்றிய தமிழ்நாடு காவல்துறை: பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டுகோள் appeared first on Dinakaran.