டிசம்பர் 21-ம் தேதி உழவர் பேரியக்க மாநில மாநாடு: ராமதாஸ் அழைப்பு

1 week ago 2

சென்னை,

பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

ஒட்டுமொத்த உலகிற்கும் உணவு படைக்கும் கடவுளர்களான உழவர்களின் கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும் என்று வலியுறுத்தி தமிழ்நாடு உழவர் பேரியக்கத்தின் மாநில மாநாடு வரும் டிசம்பர் 21-ம் தேதி (சனிக்கிழமை) திருவண்ணாமலை சந்தைமேடு பகுதில் நடைபெறும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.

பாட்டாளி மக்கள் கட்சியின் இணை அமைப்பான தமிழ்நாடு உழவர் பேரியக்கத்தின் சார்பில் டிசம்பர் 21-ம் தேதி மாலை 4.00 மணிக்கு தொடங்கும் இந்த மாநாட்டில் தமிழ்நாடு உழவர் பேரியக்கத்தின் நிறுவனரான நான், பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ், கவுரவத் தலைவர் ஜி.கே.மணி, மற்றும் பல்வேறு உழவர் அமைப்புகளின் தலைவர்கள், நிர்வாகிகள் பங்கேற்று உரை நிகழ்த்துகின்றனர். தமிழ்நாடு உழவர் பேரியக்கம் மற்றும் பாட்டாளி மக்கள் கட்சியின் இணை மற்றும் சார்பு அமைப்புகளின் அனைத்து நிலை நிர்வாகிகளும் இந்த மாநில மாநாட்டில் கலந்து கொள்ள உள்ளனர்.

தமிழ்நாட்டின் முதன்மைத் தொழில் வேளாண்மைதான்; உழவர்கள் தான் உணவு படைக்கின்றனர் என்றாலும் கூட உழவர்களுக்கும், உழவுத்தொழிலுக்கும் உரிய முக்கியத்துவத்தை மத்திய, மாநில அரசுகள் வழங்கவில்லை. தமிழ்நாட்டின் சாகுபடி பரப்பு 48 ஆண்டுகளில் 40 லட்சம் ஏக்கர் குறைந்து விட்ட நிலையில், அதை அதிகரிப்பதற்கான புதிய பாசனத் திட்டங்கள் எதையும் ஆட்சியாளர்கள் செயல்படுத்தவில்லை. சம்பந்தப்பட்ட மாநில அரசுகளிடையே கருத்தொற்றுமையை ஏற்படுத்தி செயல்படுத்த மத்திய அரசு முன்வரவில்லை; அதற்காக தமிழக அரசும் குரல் கொடுக்கவில்லை.

வறட்சி, மழை உள்ளிட்ட பேரிடர்களால் பாதிக்கப்படும் பயிர்களுக்கு உரிய இழப்பீடு வழங்கப்படுவதில்லை. பயிர் கடன்கள் தள்ளுபடி குறித்த வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை. பயிர் காப்பீட்டுத் திட்டங்கள் முறையாக செயல்படுத்தப்படுவதில்லை என உழவர்களின் துயரங்கள் அதிகரித்துக் கொண்டே செல்கின்றன. உழவர்களின் துயரங்களை மத்திய, மாநில அரசுகளுக்கு உரைக்கும் வகையில் எடுத்துக் கூறி, தீர்வுகளை பெறுவதற்காகவே தமிழ்நாடு உழவர் பேரியக்கத்தின் மாநில மாநாட்டுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது.

தமிழ்நாட்டின் உழவர்களை பாதுகாக்க வேண்டும் என்ற உன்னத நோக்கத்துடன் நடத்தப்படும் இந்த மாநில மாநாட்டில் அரசியல், சமூக வேறுபாடுகளைக் கடந்து, உழவர்கள் என்ற ஒற்றைப் போர்வையில் மாநிலம் முழுவதும் உள்ள உழவர்கள் குடும்பத்துடன் இந்த மாநாட்டில் பங்கேற்க வேண்டும் என அழைக்கிறேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Read Entire Article