
தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் மோகன்லால். இவர் நடிப்பில், மலையாள நடிகர் பிருத்விராஜ் இயக்கத்தில் கடந்த 2019-ம் ஆண்டு வெளியான திரைப்படம் 'லூசிபர்'. இந்த படத்தின் மூலம் பிருத்விராஜ் இயக்குனராக அறிமுகமானார். தற்போது, இந்த படத்தின் 2-ம் பாகம் தயாராகி இருக்கிறது. இந்த படத்திற்கு 'எல் 2 எம்புரான்' என பெயரிடப்பட்டுள்ளது. இதில், மோகன்லால், பிருத்விராஜ், மஞ்சுவாரியர், டோவினோ தாமஸ் உள்ளிட்ட பலர் நடித்திருக்கின்றனர்.
லைகா நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்தில் டோவினோ தாமஸ் 'ஜதின் ராமதாஸ்' என்ற கதாபாத்திரத்திலும், பிருத்விராஜ் 'சையத் மசூத்' என்ற கதாபாத்திரத்திலும், மோகன்லால் 'குரேஷி ஆபிராம் ஏ.கே. ஸ்டீபன் நெடும்பள்ளி' என்ற கதாபாத்திரத்திலும் நடித்துள்ளனர். இப்படத்திற்கு யு/ஏ சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. பிரமாண்டமாக உருவாகியுள்ள இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகமாகி உள்ளது. கேம் ஆப் த்ரோன்ஸ் மூலம் உலகப் புகழ் பெற்ற ஜெரோம் பிளின் இப்படத்தில் நடித்திருப்பது படத்திற்கு சர்வதேச அங்கீகாரத்தை அளித்துள்ளது.
தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி என்று பான் இந்தியா படமாக உருவான எம்புரான் வரும் 27ம் தேதி வெளியாக இருக்கிறது. அந்த நாளில் படத்தை வெளியிட ஒரு சிறப்பு காரணமும் உண்டு. அதாவது பிருத்விராஜ் இயக்கத்தில் மோகன்லால் நடிப்பில் உருவான லூசிபர் திரைக்கு வந்து 6 வருடங்கள் ஆகிறது. ஆதலால், அந்த நாளில் எம்புரான் படத்தை படக்குழுவினர் வெளியிடுகின்றனர். எம்புரான் படத்தை ஆசிர்வாத் சினிமாஸ், ஸ்ரீ கோகுலம் மூவிஸ் சார்பில் ஆண்டனி பெரும்பாவூர், கோகுலம் கோபாலன் ஆகியோர் இணைந்து தயாரித்துள்ளனர்.
ஐமேக்ஸ்-ல் வெளியாகும் முதல் மலையாளத் திரைப்படம் இது. முன்பதிவில் சாதனை படைத்து வருவதால், எதிர்பார்ப்பு அதிகமாக உள்ளது. இப்படத்திற்கான முன்பதிவு இந்தியாவில் அதிகாரபூர்வமாகத் தொடங்கியுள்ளது. இன்று காலை தொடங்கிய முன்பதிவில் எம்புரான் சாதனை படைத்துள்ளது. ஒரு மணிநேரத்தில் 96.14 ஆயிரம் டிக்கெட்டுகள் விற்பனை செய்ததோடு தளபதி விஜய்யின் லியோ பட டிக்கெட் சாதனையை முறியடித்துள்ளது. அதோடு முதல் நாளில் மட்டும் இந்தியாவில் ரூ.10 கோடி குவித்த எம்புரான் உலகளவில் ரூ.12 கோடியை தாண்டி வசூல் குவித்து வருகிறது.