திருச்சி: திருச்சியில் டிஐஜி வருண்குமார் தொடர்ந்த அவதூறு வழக்கில் இன்று மாலைக்குள் சீமான் ஆஜராகாவிட்டால் பிடிவாரன்ட் பிறப்பிக்கப்படும் என்று நீதிபதி உத்தரவிட்டார். திருச்சி சரக டிஐஜி வருண்குமார். இவர் தன் மீதும், தன் குடும்பத்தார் மீதும் அவதுாறு கருத்துக்களை சீமான் சமூக வலைதளங்களில் பரப்பி வருவதாகவும், தன்னை பணி செய்ய விடாமல் மிரட்டி வருவதாகவும், அவர் மீது உரிய சட்ட நடவடிக்கை எடுப்பதுடன், அவதூறு கருத்துக்கள் பரப்பியதற்கு, நஷ்டஈடாக ரூ.2 கோடி வழங்க வேண்டும் எனவும் திருச்சி மாவட்ட குற்றவியல் கோர்ட் எண் 4ல் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கை விசாரணைக்கு எடுத்து கொண்ட நீதிமன்றம், சீமானை கடந்த பிப்ரவரி 19ம் தேதி கோர்ட்டில் நேரில் ஆஜராக சம்மன் அனுப்பியது. இந்த வழக்கு பிப்ரவரி 19ம் தேதி விசாரணைக்கு வந்தது. ஆனால் சீமான் ஆஜராகவில்லை. மனுதாரரான வருண்குமார் மட்டும் ஆஜரானார். இதையடுத்து வழக்கு விசாரணையை ஏப்ரல் 7ம் தேதிக்கு (இன்று) ஒத்தி வைத்தும், அன்று சீமான் கட்டாயம் நேரில் ஆஜராக வேண்டும் என்று நீதிபதி (பொ) பாலாஜி உத்தரவிட்டார். இந்நிலையில் இந்த வழக்கு திருச்சி மாவட்ட குற்றவியல் கோர்ட் எண் 4ல் இன்று காலை விசாரணைக்கு வந்தது. இதில் வருண்குமார் தரப்பில் அவரது வக்கீல் ஆஜரானார்.
அதேபோல் சீமான் தரப்பிலும் அவரது வக்கீல்கள் ஆஜராகினர். அப்போது அவர்கள், நீதிபதியிடம் சீமான் ஆஜராக மேலும் கால அவகாசம் கேட்டனர். அதற்கு கடந்த முறை நடந்த விசாரணையின்போதும் இப்படி தானே கேட்டீர்கள் என்று நீதிபதி பாலாஜி கூறியதுடன், இன்று மாலை 5 மணிக்குள் கோர்ட்டில் சீமான் நேரில் ஆஜராகாவிட்டால் பிடிவாரன்ட் பிறப்பிக்கப்படும் என்று விசாரணைைய தற்காலிகமாக ஒத்திவைத்து நீதிபதி பாலாஜி உத்தரவிட்டார்.
The post டிஐஜி வருண்குமாரின் அவதூறு வழக்கு; இன்று மாலைக்குள் சீமான் ஆஜராகாவிட்டால் பிடிவாரன்ட்: திருச்சி கோர்ட் உத்தரவு appeared first on Dinakaran.