டி20 கிரிக்கெட்: பெங்களூரு அணியின் மாபெரும் சாதனையை சமன் செய்த இந்தியா

1 week ago 3

செஞ்சூரியன்,

தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி 4 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இதன் 3-வது 20 ஓவர் போட்டி செஞ்சூரியனில் நேற்று நடைபெற்றது.

இதில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க அணியின் கேப்டன் மார்க்ரம் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 219 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக திலக் வர்மா 107 ரன்களும், அபிஷேக் சர்மா 50 ரன்களும் அடித்தனர்.

இதனையடுத்து 220 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி ஆடிய தென் ஆப்பிரிக்கா 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 208 ரன்கள் மட்டுமே அடித்தது. இதனால் இந்தியா 11 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

தென் ஆப்பிரிக்க தரப்பில் அதிகபட்சமாக மார்கோ ஜான்சன் 54 ரன்கள் அடித்து வெற்றிக்கு போராடினார். இந்தியா தரப்பில் அதிகபட்சமாக அர்ஷ்தீப்சிங் 3 விக்கெட்டுகளும், வருண் சக்ரவர்த்தி 2 விக்கெட்டுகளும் கைப்பற்றினர். இந்த வெற்றியின் மூலம் தொடரில் இந்தியா 2-1 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.

முன்னதாக இந்த ஆட்டத்தில் சதம் அடித்த திலக் வர்மாவையும் சேர்த்து இந்தியா தரப்பில் இந்த வருடம் மட்டும் 5 வீரர்கள் சதமடித்துள்ளனர்.

இதன் மூலம் டி20 கிரிக்கெட்டில் ஒரு வருடத்தில் அதிக சதங்கள் அடித்த அணி என்ற உலக சாதனையை இந்தியா சமன் செய்துள்ளது. இதற்கு முன் 2016-ம் ஆண்டு ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், 2023-ம் ஆண்டு இந்தியாவும் தலா 5 சதங்கள் அடித்துள்ளன. தொடர்ந்து 2 ஆண்டுகளாக இந்தியா இந்த சாதனையை செய்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

Read Entire Article