
கொல்கத்தா,
ஐ.பி.எல். தொடரில் கொல்கத்தாவில் நேற்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த கொல்கத்தா 20 ஓவர்களில் 6 விக்கெட்டை இழந்து 200 ரன்கள் குவித்தது. தொடர்ந்து 201 ரன் இலக்கை நோக்கி களம் புகுந்த ஐதராபாத் 16.4 ஓவரில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 120 ரன்னுக்கு ஆல் அவுட் ஆனது.
இதன் மூலம் 80 ரன் வித்தியாசத்தில் கொல்கத்தா அபார வெற்றி பெற்றது. கொல்கத்தா தரப்பில் வைபவ் அரோரா, வருண் சக்ரவர்த்தி தலா 3 விக்கெட்டும், ரசல் 2 விக்கெட்டும், ஹர்ஷித் ராணா, சுனில் நரைன் ஆகியோர் தலா 1 விக்கெட்டும் வீழ்த்தினர். இந்நிலையில், இந்த ஆட்டத்தில் ஒரு விக்கெட் வீழ்த்தியன் மூலம் டி20 கிரிக்கெட்டில் கொல்கத்தா அணிக்காக முதல் வீரராக சுனில் நரைன் மாபெரும் சாதனை ஒன்றை படைத்துள்ளார்.
அதாவது டி20 கிரிக்கெட்டில் (ஐ.பி.எல். + சாம்பியன்ஸ் லீக் டி20) கொல்கத்தா அணிக்காக 200 (182 ஐ.பி.எல். + 18 சாம்பியன்ஸ் லீக் டி20) விக்கெட்டுகள் வீழ்த்திய முதல் வீரர் என்ற மாபெரும் சாதனையை சுனில் நரைன் படைத்துள்ளார். உலக அளவில் இந்த பட்டியலில் சமித் படேல் (நாட்டிங்ஹாம்ஷயர்) 208 விக்கெட்டுகளுடன் முதல் இடத்தில் உள்ளார்.
தொடர்ந்து சுனில் நரைன் (200 விக்கெட்டுகள்) 2ம் இடத்திலும், கிறிஸ் வுட் (ஹாம்ப்ஷயர்) 199 விக்கெட்டுகளுடன் 3ம் இடத்திலும், லசித் மலிங்கா (மும்பை இந்தியன்ஸ்) 195 விக்கெட்டுகளுடன் 4ம் இடத்திலும் உள்ளனர்.