
புதுடெல்லி,
ஐ.பி.எல். தொடரில் டெல்லியில் நேற்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் டெல்லி கேப்பிடல்ஸ் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த கொல்கத்தா 20 ஓவரில் 9 விக்கெட்டை இழந்து 204 ரன்கள் எடுத்தது. கொல்கத்தா தரப்பில் அதிகபட்சமாக ரகுவன்ஷி 44 ரன் எடுத்தார். டெல்லி தரப்பில் ஸ்டார்க் 3 விக்கெட் வீழ்த்தினார்.
தொடர்ந்து 205 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய டெல்லி 20 ஓவரில் 9 விக்கெட்டை இழந்து 190 ரன்கள் மட்டுமே எடுத்தது. டெல்லி தரப்பில் அதிகபட்சமாக டு பிளெஸ்சிஸ் 62 ரன் எடுத்தார். கொல்கத்தா தரப்பில் சுனில் நரேன் 3 விக்கெட் வீழ்த்தினார். இந்த போட்டியின் ஆட்டநாயகன் விருது சுனில் நரேனுக்கு வழங்கப்பட்டது.
இந்நிலையில், இந்த ஆட்டத்தில் 3 விக்கெட் வீழ்த்தியதன் மூலம் டி20 கிரிக்கெட்டில் கொல்கத்தா அணிக்காக சுனில் நரேன் உலக சாதனை ஒன்றை படைத்துள்ளார். அதாவது டி20 கிரிக்கெட்டில் ஒரு அணிக்காக அதிக விக்கெட் வீழ்த்தியவர்கள் பட்டியலில் சுனில் நரேன் (208 விக்கெட், கொல்கத்தா நைட் ரைடர்ஸ்) முதல் இடத்திற்கு முன்னேறி உள்ளார்.
உலக அளவில் இந்த பட்டியலில் சமித் படேலுடன் (208 விக்கெட், நாட்டிங்ஹாம்ஷயர்) 208 சுனில் நரேன் முதல் இடத்தை பகிர்ந்து கொண்டுள்ளார். தொடர்ந்து கிறிஸ் வுட் (ஹாம்ப்ஷயர்) 199 விக்கெட்டுகளுடன் 2ம் இடத்திலும், லசித் மலிங்கா (மும்பை இந்தியன்ஸ்) 195 விக்கெட்டுகளுடன் 3ம் இடத்திலும் உள்ளனர்.