ராஜ்கோட்,
17-வது சையத் முஷ்டாக் அலி கோப்பை டி20 தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இதில் ராஜ்கோட்டில் இன்று நடைபெற்ற ஆட்டத்தில் அபிஷேக் சர்மா தலைமையிலான பஞ்சாப் அணி, மேகாலயாவை எதிர்கொண்டது.
இதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த மேகாலயா நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 142 ரன்கள் அடித்தது. அதிகபட்சமாக அர்பித் பதேவாரா 31 ரன்கள் அடித்தார். பஞ்சாப் தரப்பில் அபிஷேக் சர்மா மற்றும் ரமந்தீப் சிங் தலா 2 விக்கெட்டுகள் வீழ்த்தினர்.
இதனையடுத்து 143 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய பஞ்சாப் அணிக்கு தொடக்க ஆட்டக்காரர் ஆன கேப்டன் அபிஷேக் சர்மா அதிரடியாக விளையாடி தனி ஆளாக அணிக்கு வெற்றியை பெற்றுக்கொடுத்தார். வெறும் 28 பந்துகளில் சதம் அடித்து அசத்தினார்.
வெறும் 9.3 ஓவர்களிலேயே இலக்கை கடந்த பஞ்சாப் 144 ரன்கள் அடித்து 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. அபிஷேக் சர்மா 29 பந்துகளில் 106 ரன்கள் குவித்த நிலையில் ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார்.
இந்த ஆட்டத்தில் 28 பந்துகளில் சதம் அடித்ததன் மூலம் அபிஷேக் சர்மா டி20 கிரிக்கெட் வரலாற்றில் குறைந்த பந்துகளில் சதம் அடித்த இந்திய வீரர் என்ற உர்வில் படேலின் மாபெரும் வரலாற்று சாதனையை சமன் செய்துள்ளார்.
குஜராத் வீரரான உர்வில் படேல் நடப்பு சையத் முஷ்டாக் அலி கோப்பை தொடரில் திரிபுராவுக்கு எதிரான ஆட்டத்தில் 28 பந்துகளில் சதம் அடித்து அசத்தினார்.