
அகமதாபாத்,
ஐ.பி.எல். தொடரில் அகமதாபாத்தில் நேற்று மாலை அரங்கேறிய 67-வது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் - குஜராத் டைட்டன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இதில் டாஸ் வென்ற சென்னை அணியின் கேப்டன் தோனி பேட்டிங்கை தேர்வு செய்தார்.
அதன்படி முதலில் பேட்டிங் செய்த சென்னை சூப்பர் கிங்ஸ் 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுக்கு 230 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக பிரெவிஸ் 57 ரன்களும், கான்வே 52 ரன்களும் அடித்தனர். குஜராத் தரப்பில் பிரசித் கிருஷ்ணா 2 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.
பின்னர் இமாலய இலக்கை நோக்கி ஆடிய குஜராத் அணி 18.3 ஓவர்களில் 147 ரன்னில் ஆல்-அவுட் ஆனது. இதன் மூலம் சென்னை 83 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. குஜராத் தரப்பில் அதிகபட்சமாக சாய் சுதர்சன் 41 ரன்கள் அடித்தார். சென்னை தரப்பில் அன்ஜூல் கம்போஜ், நூர் அகமது தலா 3 விக்கெட்டுகள் வீழ்த்தினர். பிரெவிஸ் ஆட்ட நாயகன் விருது வென்றார்.
இந்நிலையில் இந்த போட்டி முடிந்து ஆட்ட நாயகன் பிரெவிஸ் அளித்த பேட்டியில், "நான் மகிழ்ச்சியாக இருக்கிறேன். இந்த போட்டியில் நான் எந்தவொரு அழுத்தமும் இன்றி என்னுடைய ஆட்டத்தை மகிழ்ச்சியுடன் வெளிப்படுத்தினேன். இதுபோன்று விளையாட வேண்டும் என்று என் மனதிடம் எப்போதும் கூறிக்கொள்கிறேன். நான் எப்போதும் அணிக்காக விளையாட விரும்பினேன். இதுபோன்ற ஒரு இன்னிங்ஸ் என்னிடம் இருந்து வந்ததில் திருப்தியாக இருக்கிறது. அதற்காக நான் மிகவும் நன்றியுள்ளவனாக இருக்கிறேன்.
என்னை அனைவரும் ஏபி டி வில்லியர்ஸ் உடன் ஒப்பிட்டு பேசுகிறார்கள். அது எனக்கு பெருமை. ஆனால் நான் நானாக இருக்க விரும்புகிறேன் "என்று கூறினார்.