
டாஸ்மாக்கில் ரூ. 1,000 கோடி ஊழலுக்கு பொறுப்பான அந்த தியாகி யார்? என்று அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார்.
இது தொடர்பாக எடப்பாடி பழனிசாமி தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,
யார்_அந்த_தியாகி என்ற கேள்விக்கு பதில் சொல்லத் திராணியில்லாத மு.க.ஸ்டாலின், சம்மந்தமே இல்லாத ஒரு பதிலை அளித்துள்ளார். சிட்டி பாபுவில் ஆரம்பித்து, தா. கிருட்டிணன், சாதிக் பாட்சா என பல்வேறு தியாகிகளை வரிசையாக கூற முடியும்.
உங்கள் குடும்பத்தில் செல்வாக்கு யாருக்கு அதிகம் என்ற போட்டியில் எரித்து கொல்லப்பட்டு , தியாகிகள் ஆக்கப்பட்ட அப்பாவி தினகரன் ஊழியர்களை நினைவிருக்கிறதா?
இவ்வளவு ஏன், கனவிலும் திமுகவில் தலைவராகவோ, முதல்வராகவோ உங்கள் குடும்பத்தை மீறி யாரும் எந்த பதவியிலும் வர முடியாது என தெரிந்தும் ,
நீண்ட நாட்களாக தாங்கள் சுரண்டபடுகிறோம் - கொத்தடிமைகளாக நடத்த படுகிறோம் என அறிந்தும் , திமுகவில் தொடர்ந்து இருக்கும் தொண்டர்கள்தான் தியாகிகள் !
ஆனால், நாங்கள் கேட்ட கேள்வி அதுவல்ல. டாஸ்மாக்கில் 1000 கோடி ரூபாய் ஊழல் நடந்திருப்பதாக அமலாக்கத்துறை சொல்லியிருக்கிறதே அந்த ஊழலுக்கு பொறுப்பான அந்த தியாகி யார் என்று தான் கேட்கிறோம்.
அவருக்கு தியாகி பட்டம் கொடுத்த நீங்கள் தான் அந்த கேள்விக்கு பதில் சொல்ல வேண்டும் மு.க.ஸ்டாலின் அவர்களே!
#யார்_அந்த_தியாகி ?
உங்கள் பதிலுக்கு மக்களுடன் இணைந்து காத்திருக்கிறோம்! அதிமுக' என பதிவிட்டுள்ளார்.